search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன
    • பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

    இந்நிலையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    • தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்திரி பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபார்த்து, தருமபுரி வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
    • உரிய ஆவணமின்றி ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 505 பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

    தருமபுரி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை, உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லவதை தடுக்க, தருமபுரி மாவட்டத்தில், 10 சோதனை சாவடிகள், 45 பறக்கும் படை குழுவினர், 45 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

    இதையடுத்து, பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையடுத்து நல்லம்பள்ளி அடுத்த சேசம்பட்டி கூட்டு ரோடு அருகே ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, தருமபுரி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், 11.58 லட்சம் ரூபாய் இருந்தது கண்டு பிடிக்கபட்டது. இதையடுத்து, பறக்கும் படையினர் காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, தருமபுரி மாவட்டம், லளிகத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மோகன், 29 என்பவர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தை தருமபுரிக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

    பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததை அடுத்து கைப்பற்றிய பணத்தை, பறக்கும் படை யினர், தருமபுரி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஜெய செல்வத்திடம் ஒப்படைத்தனர்.

    தருமபுரி ஆர்.டி.ஓ., காயத்திரி பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபார்த்து, தருமபுரி வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.

    பணத்துக்கான உரிய ரசீதை ஒப்படைத்து, வருமான வரித்துறையினரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் பணத்தை எடுத்து வந்த மோகனிடம் தெரிவித்தனர். இதே போன்று தொப்பூரில் உரிய அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட, ரூ.69 ஆயிரம் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி அருகே பறக்கும் படையினர் சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த போர்ஸ் டிராவலர்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் உரிய ஆவணமின்றி ரூ.6 லட்சத்து 54 ஆயிரத்து 505 பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்.

    அதில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த ராஜி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான மாதா மலர் பீடி நிறுவனத்தின் மூலம் தயாரித்த புகையிலை வியாபார பொருட்களை ஜோலார்பேட்டை முதல் சேலம் வரை உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளராக இருந்து வருவதாகவும், விற்பனை செய்த பணத்தை எடுத்துக்கொண்டு சேலத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.

    அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் அவரிடமிருந்து மேற்கண்ட தொகை பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

    • ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வரும் நிலையில் தற்போது வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.
    • ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து சற்று அதிகரித்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வரும் நிலையில் தற்போது வினாடிக்கு 400 கன அடியாக நீர்வரத்து நீடித்து வருகிறது.

    கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் திடீரென்று நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி வினாடிக்கு 2500 கனஅடியாக அதிகரித்து வந்தது. இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை நேர நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக சரிந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து சற்று அதிகரித்து 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டி செல்லும் வேகமும் குறைந்துள்ளது.

    மழை அளவு பொறுத்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவும் குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
    • யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    தருமபுரி:

    ஒற்றை ஆண் யானை ஒன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியேறியது. இந்த யானை கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து, கடந்த வாரம் தருமபுரி நகர் பகுதி வரை சென்றது. மேலும் தருமபுரியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனே தருமபுரிக்கு வந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானையை தொப்பூர் வனப் பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஒற்றை யானை மீண்டும் பொம்மிடி கிராமப் பகுதியில் நுழைந்தது.

    குறிப்பாக முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, காளிக்கரம்பு வழியாக சுற்றிய யானையை கம்பைநல்லூர் வழியாக கொண்டு சென்று பாலக்கோடு வனப்பகுதியில் விட வன துறை தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை சில்லாரஅள்ளியில் இருந்து கொடகாரஅள்ளி பகுதியில் மைலாப்பூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தது.

    வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வத்தல் மலை அடிவாரபகுதியில் நேற்று இரவு நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டிலிருந்து வெளியேறிய யானை விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி உணவை உட்கொண்டது. அப்போது யானைக்கு வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசி செலுத்தினர்.

    உடனடியாக கிரேன் மூலம் யானையை மீட்டு ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதிகளுக்குள் விடுவதற்காக யானையை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.

    கடந்த 3 வாரமாக மக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.
    • குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக உள்ளது.

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், கடந்த 3 நாட்களாக தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2500 கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது.

    தற்போது கர்நாடகா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது.

    இந்த நீர்வரத்தானது படிப்படியாக குறைந்து இன்று அதிகாலை வினாடிக்கு 1200 கன அடியாக இருந்த நிலையில் காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 800 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. குறைந்த அளவில் நீர்வரத்து இருந்தபோதிலும் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தருமபுரி மாவட்டத்தில் கோடை காலத்திற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெப்பத்தை தணிக்கவும், தற்போது நீர்வரத்து ஓரளவிற்கு வந்து கொண்டிருப்பதாலும், அருவிகளில் தண்ணீர் சீராக செல்வதாலும் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிறிது நேரம் கழித்து மீண்டும் வாலிபர் மட்டும் சிறுவன் இல்லாமல் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.
    • தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், நேரில் வந்து பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மன்மதன். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சீதா என்ற மனைவி உள்ளார்.

    இந்த தம்பதியினருக்கு பல ஆண்டுகள் கழித்து பிறந்த மகன் பொன்னரசு (வயது 10). இந்த சிறுவன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் சிறுவனை காணவில்லை.

    இந்த நிலையில் பதறிப்போன சிறுவனின் உறவினர்கள் அவனை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சிறுவன் மாயமானது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ்அப் முகநூலில் பதிவிட்டு காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    இதனை அடுத்து அதியமான்கோட்டை போலீசார் விசாரித்ததில் சுமார் 12 மணியளவில் பள்ளியில் இருந்த பொன்னரசுவை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்துச் சென்றதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்த சிலர் கூறினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்திற்கு சென்று தீவிர விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுவன் பொன்னரசு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் சென்றது பதிவாகி இருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வாலிபர் மட்டும் சிறுவன் இல்லாமல் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் மகன் இளங்கோ (19) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இளங்கோவை பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த கிராம மக்கள் இரவு 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டனர். சிறுவனுக்கு என்ன ஆனது என உறவினர்களும், கிராம மக்களும் ஒன்று சேர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த தருமபுரி டி.எஸ்.பி. சிவராமன், நேரில் வந்து பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது இளங்கோ கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சா மயக்கத்தில் இருந்த இளங்கோ பள்ளியில் இருந்த சிறுவனை அழைத்துச் சென்று அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விவசாய கிணற்றுக்கு சென்று இரவு 12 மணி அளவில் சிறுவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரத்தில் பொன்னரசுவின் பிணத்தை கிணற்றில் இருந்து மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இளங்கோவனிடம் எதற்காக சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான நல்லம்பள்ளி, நார்த்தம்பட்டி, இலளிக்கம், மிட்டாரெட்டி அள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கஞ்சா சரளமாக புழக்கத்தில் இருப்பதாகவும் மாணவர்கள், இளைஞர்கள் சிலர் இதற்கு அடிமையாகி வருவதும், அதனால்தான் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் சில அலோபதி மருந்து கடைகளில் ரூ.10-க்கு போதை ஊசி போடுவதாக அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தனர்.

    • தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2500 கன அடியாக நீடித்து வருகிறது.
    • ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு கடந்த 3 மாதங்களாக மிக குறைந்த அளவிலே நீர்வரத்து வந்து கொண்டிருந்தது .

    நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்த நிலையில் கடந்த 17 நாட்களாக நீர்வரத்து 200 கன அடியாக நீடித்து வந்தது. குறைந்த அளவு தண்ணீர் வந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வறண்டு, வெறும் பாறைகளாகவே காட்சி அளித்தது.

    ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்தது. இந்த நிலையில் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2500 கன அடியாக நீடித்து வருகிறது.

    இதனால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி செல்கின்றன. இந்த நீர்வரத்தானது மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நீர்வரத்தால் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு வழங்கக்கூடிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும்.

    அதேபோல டெல்டா பாசன விவசாயிகளும் பயனடைவார்கள் என கருதப்படுகிறது.

    • பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்தவர் கருணாநிதி.
    • பிரதமரின் சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாக தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.

    தருமபுரி:

    தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் ரூ.560 கோடி மதிப்பலான 75 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தருமபுரி மாவட்டத்தில் ரூ.151.89 கோடி மதிப்பிலான 879 முடிக்கப்பட்ட திட்டப்பணிகளையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.34.10 கோடி மதிப்பில் 41 திட்டப்பணிகளும், சேலம் மாவட்டத்தில் ரூ.164.51 கோடி மதிப்பிலான கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நீர்வளத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை,

    பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தொழில்நுட்ப கல்வி துறை, பொதுப் பணித்துறை, உயர்கல்வி துறை, வனத்துறை, காவல் துறை, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, கூட்டுறவுத்துறை,

    சமூக நலத்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,

    முன்னாள் படைவீரர் நலத்துறை, தாட்கோ, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.37.44 கோடி மதிப்பிலான 51 திட்டப்பணிகளையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.65.56 கோடி மதிப்பிலான 17 திட்டப்பணிகளையும், சேலம் மாவட்டத்தில் ரூ.12.19 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டப்பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 3,856 பயனாளிகளுக்கு ரூ.55.76 கோடி மதிப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 2,206 பயனாளிகளுக்கு ரூ.21.63 கோடி மதிப்பிலும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,674 பயனாளிகளுக்கு ரூ.18.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 8736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    * சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி 3 மாவட்டங்களுக்கான முத்தான விழா.

    * ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் ஆட்சி செய்த பூமி தருமபுரி. தமிழ் வளர வேண்டும் என்பதால் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் அதியமான்.

    * தருமபுரி என்றதும் நினைவுக்கு வருவது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை அறிவித்தேன்.

    * பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்தவர் கருணாநிதி.

    * திராவிட மாடல் அரசு வகுத்த திட்டங்கள் குறித்து நாள் முழுவதும் பேசலாம்.

    * மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம்.

    * தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * தருமபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை முடக்கியது அதிமுக.

    * ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை கொடுத்து வருகிறது.

    * பேருந்து வசதி இல்லாத 8 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து செய்து கொடுத்துள்ளோம்.

    * 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

    * கிருஷ்ணகிரி மாவட்டத்தில 920 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நிறைவேற்றம்.

    * சேலம் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

    * தருமபுரி பாரதிபுரத்தில் 36 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம்.

    * தருமபுரி மாவட்டத்தில் 5 சமுதாக நலக்கூடம் அமைக்கப்படும்.

    * வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    * தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க 10 கோடியில் எஃகு வேலி அமைக்கப்படும்.

    * சேலத்தில் 164 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலை திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும்.

    * எப்போதும் மக்களுக்காகவே செயல்படும் திராவிட மாடல் அரசு.

    * மத்திய பாஜக அரசு மாநிலங்களை சமமாக நடத்துவது இல்லை.

    * மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது.

    * மாநில அரசின் ஆக்சிஜனான வரி வருவாயை நிறுத்த முயற்சிக்கிறது மத்திய அரசு.

    * மத்திய அரசுக்கு வருவாய் என்பது மாநில அரசு கொடுப்பது தான்.

    * பிரதமரின் சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாக தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.

    * தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது பிரதமருக்கு பாசம் வருகிறது.

    * சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய் ஏற்றிவிட்டு தேர்தல் வருவதால் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    * தேர்தல் காரணமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என நாடகமாடுகிறார்கள் என்று பேசினார்.

    • கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது.
    • யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகர பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. அந்த ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை கடந்த 3 நாட்களாக கிராமப் பகுதிக்குள் புகுந்து காரிமங்கலம் வழியாக அண்ணாமலைஅள்ளி, சவுளுக்கொட்டாய் பகுதி யில் இருந்த கரும்பு தோட் டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது. படுகாயம் அடைந்த அந்தப் பெண் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் யானை திருப்பத்தூர் சாலை வழியாக சோளக்கொட்டை அருகே மான்காரன் கோட்டை பகுதியை வந்து அடைந்தது அங்குள்ள கரும்பு தோட்டம், தீவனம் பயிர், சோளத்தட்டு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து, பின்பு இரவு அங்கிருந்து வனத் துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்ட தொடங்கினர்.

    அப்போது அந்த யானை வேறு பகுதிக்கு சென்றது. தொடர்ந்து வனத் துறையினர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 7 மணி அள வில் தருமபுரி திருப்பத்தூர் சாலையை கடந்து செட்டிகரை பகுதி பொறியியல் கல்லூரி பின் பகுதியில் தஞ்சம் அடைந்தது.

    வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை தருமபுரி நகரப் பகுதியான வேடியப்பன் திட்டு, அக்ரஹாரம், சனத்குமார்ஓடை அருகே தற்பொழுது யானை குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிக்கு யானை புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வேறு பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் யானை தற்போது சனத்க்குமார் ஓடை அருகே உள்ள புதர் பகுதியில் புகுந்துள்ளதால் 3 வனக் குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் நின்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    யானை நகரப் பகுதியில் தற்பொழுது இருப்பதால் இந்த பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டித்துள்ளனர். மேலும் யானை நகரப் பகுதிக்குள் செல்ல நேர்ந்தால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தருமபுரி நகரப் பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியின் போது 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி அடுத்த சோகத்தூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தருமபுரி சேலம், புதுக்கோட்டை, மதுரை, கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.

    இதில் தன்னை அடக்க வந்த வீரர்களை காளைகள் தூக்கி வீசியது. போட்டியில் காயம் அடைந்தவர்ளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், மிக்சி, மின்விசிறி, ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இந்த ஜல்லிகட்டில் சுமார் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை பொதுமக்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியின் போது 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • தமிழ்நாட்டில் இருந்து ஆதினம் செங்கோலை மோடியிடம் கொடுத்தது குறிப்பிடதக்கது.
    • பா.ஜ.க, அ.தி.மு.க-வை தோற்கடித்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்.

    தருமபுரி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பேரவை கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்ததலைவர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்திற்கு பின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னணி ஊழியர்கள் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. பா.ஜ.க-வின் தலைவர் அண்ணாமலை பேசும் போது அரசியல் அநாகரிகமாக பேசக்கூடாது.

    அவர் குறிப்பாக தி.மு.க கூட்டணி கட்சியினரை தரம் தாழ்த்தி பேசிவருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க 40 தொகுதிகளிலும் தோற்பது, தேர்தலுக்கு முன்னரே உறுதியாகிவிட்டது. மேலும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை டெபாசிட் இழக்க வைப்போம்.

    மேலும் அவர்கள் ஆபாச படத்தை வெளியிடுவதாக கூறி தருமபுரம் ஆதினத்தை மிரட்டுகின்றனர். போலீசார் விசாரணையில், அவரை மிரட்டுவதே பா.ஜ.க கட்சியினர் என தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆதினம் செங்கோலை மோடியிடம் கொடுத்தது குறிப்பிடதக்கது. அவருக்கே அந்த நிலை என்றால் மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

    பா.ஜ.க ,அ.தி.மு.க-வை தோற்கடித்து தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவேண்டும். சாதிய கூட்டணியை தோற்கடிக்க கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும்.

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து 2 சீட் கொடுத்துள்ளனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தொகுதி என்பது முடிவாகும், தி.மு.க கூட்டணி தேர்தல் கால கூட்டணி அல்ல, மதச்சார்பின்மையை பாதுகாக்க, உருவான கொள்கை கூட்டணி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒற்றை யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது.
    • ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது. இந்த யானை காலை நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்வதும், இரவில் கிராமப்புறங்களில் நுழைந்து விவசாய பயிர்களை அழிப்பதுமாக இருந்து வந்துள்ளது.

    இதனை கடந்த 3 நாட்களாக பாலக்கோடு-காரிமங்கலம் இடையில் உள்ள ஆராதஹள்ளி கூட்ரோடு பகுதியில் உள்ள மலைப் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு காரிமங்கலம் பகுதியை நோக்கி யானை சென்றுள்ளது. அப்பொழுது சவுளுக்கொட்டாய் பகுதிகளில் விவசாய நிலங்களில் நுழைந்துள்ளது. இரவு நேரம் என்பதால், வனத்துறையினரால் யானையினை கண்காணித்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் யானை சென்ற திசை தெரியாமல் வனத்துறையினர் அதே பகுதியில் சுற்றி தேடி வந்தனர்.

    இந்நிலையில் அதிகாலை காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் பகுதியில் பெருமாள் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ என்பவர், அதிகாலை 5.30 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வயல் வழி பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென வந்த யானை ஜெயஸ்ரீயை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்து சுயநினைவின்றி அதே இடத்தில் அவர் விழுந்து கிடந்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து இயற்கை உபாதை கழிக்க சென்ற ஜெயஸ்ரீ நீண்ட நேரமாக வராததால், வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்பொழுது சுய நினைவின்றி படுகாயத்துடன் கிடந்துள்ளார். அதன் அருகில் கரும்பு தோட்டத்தில் ஒற்றை யானை இருந்தது தெரிய வந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர், ஜெயஸ்ரீயை உடனடியாக அந்த இடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். அப்பொழுது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது நுரையீரல் பகுதியில் யானை பலமாக தாக்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெயஸ்ரீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பெருமாள் ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு மூன்று மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் ஒற்றை ஆண் யானை தாக்கியதில், படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெயஸ்ரீ சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    ×