search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இறைவனை அடையும் 10 வழிகள்
    X

    இறைவனை அடையும் 10 வழிகள்

    • மகாவிஷ்ணுவை வழிபடுபவர்களை, வைணவர்கள் என்று அழைக்கிறோம்.
    • வைணவர்கள், இறைவனை அடைவதற்கான வழிமுறைகளின் பேரில் 10 விதமாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    காக்கும் கடவுளாக இருக்கும் மகாவிஷ்ணுவை வழிபடுபவர்களை, வைணவர்கள் என்று அழைக்கிறோம். பெருமாளை வழிபடும் இந்த வைணவர்கள், இறைவனை அடைவதற்காக மேற்கொள்ளும் வழிமுறைகளின் பேரில் 10 விதமாக பிரிக்கப்பட்டுள்ளனர். அத்வேஷி, அனுகூலன், நாமதாரி, சக்ராங்கி, மந்திரபாடி, வைஷ்ணவன், ஸ்ரீவைஷ்ணவன், ப்ரபந்நன், ஏகாந்தி, பரம ஏகாந்தி என்ற அந்த 10 வித வைணவர்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    அத்வேஷி:-

    எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், மகாவிஷ்ணுவின் மீதும், அவரது அடியார்களிடத்திலும் வெறுப்பு கொள்ளாமல் இருப்பவன் 'அத்வேஷி.'

    அனுகூலன்:-

    ஒருவர் அத்வேஷியாக இருப்பதோடு, தினமும் பெருமாள் ஆலயங்களுக்குச் செல்வது, கோவில் உற்சவங்களில் பங்கேற்பது, அடியவர்களை போற்றி மரியாதை செய்வது, மற்ற வைணவர்களோடு இணைந்து பணியாற்றுவது என்று இவை அனைத்தையும் விருப்பத்துடன் செய்பவனே 'அனுகூலன்.'

    நாமதாரி:-

    மேலே குறிப்பிட்ட குணங்களோடு, மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஏதாவது ஒன்றை, தன்னுடைய பெயராக வைத்திருப்பவன் 'நாமதாரி' ஆவான்.

    சக்ராங்கி:-

    மேற்சொன்ன மூன்று குணங்களோடு, வேத சாஸ்திரங்களில் கூறியிருக்கும்படி, மகாவிஷ்ணுவின் திவ்ய ஆயுதங் களான சங்கு, சக்கர சின்னங்களை ஆச்சாரியன் மூலமாக தன் தோள்களில் தரித்தவரும், திருமண் காப்பு அணிந்தவரும் 'சத்ராங்கி' எனப்படுவார்.

    மந்திரபாடி:-

    முன்பு சொன்ன நான்கோடு, சகல ஐஸ்வரியங்களையும் கொடுக்கக்கூடிய அஷ்டகாட்சரமான 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை ஆச்சாரியன் மூலமாக உபதேசம் பெற்று, தினமும் ஜெபித்து காரியசித்தி பெறுபவரே, 'மந்திரபாடி.'

    வைஷ்ணவன்:-

    இதற்கு முன்பாக கூறப்பட்ட ஐந்து குணங்களோடு, ஐம்புலன் இன்பங்களையும், இதர தேவதைகளை வழிபடுவதையும் விட்டவன், மோட்சம் அடைவதற்குரிய வழிகளான கர்ம, ஞான அல்லது பக்தி மார்க்கங்களை கடைப்பிடிப்பவனே 'வைஷ்ணவன்.'

    ஸ்ரீவைஷ்ணவன்:-

    மேலே சொன்ன 6 வழிகளையும் கடைப்பிடித்து, வேறு சிந்தனை இல்லாமல், ஸ்ரீமந் நாராயணரை மட்டும் மனதில் நிறுத்தி, தினமும் தியானிப்பவனே 'ஸ்ரீவைஷ்ணவன்.'

    ப்ரபந்நன்:-

    மேலே குறிப்பிட்ட 7 தகுதிகளோடு, இறைவனை அடைவதற்கு சரணாகதியே தகுந்தது என்ற வழியை பின்பற்றுபவனே 'ப்ரபந்நன்.'

    ஏகாந்தி:-

    முன்பு சொன்ன எட்டு தகுதிகளோடு, பெருமாளை அடைவவதற்கு சரணாகதியும் கூட போதுமானதல்ல என்று முடிவு செய்து, அந்த பகவானையே உபாயமாக பற்றிக்கொள்பவன்தான் 'ஏகாந்தி' ஆகிறான்.

    பரம ஏகாந்தி:-

    இதற்கு முன்பு சொல்லப்பட்ட 9 தகுதிகளையும் பெற்றிருந்தாலும், பகவானை சரணடைவதோ, அவனையே உபாயமாக கொள்வதோ கடினம் என்பதை உணர்ந்து, நல்ல வழிகாட்டியாக இருக்கும் நல்லதொரு ஆச்சாரியானை சரணடைந்து, அவர் மூலமாக பெருமாளை அடையலாம் என்று முடிவு செய்பவனே 'பரம ஏகாந்தி.'

    Next Story
    ×