search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி பிரம்மோற்சவம்: வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட நறுமண பொருட்களால் திருமஞ்சனம்

    • உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்படுகின்றன.
    • வரும் நாட்களிலும் வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின்போது உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பிரத்யேகமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    அதற்காக ஒரு டன் கட் பிளவர்கள் மற்றும் பழங்கள், பூக்கள், வாசனை திரவியங்கள், ஜப்பான் ஆப்பிள், மஸ்கட் திராட்சை, தாய்லாந்தில் இருந்து மாம்பழம், அமெரிக்காவில் இருந்து செர்ரிஸ் பழங்கள் போன்றவைகள் பக்தர்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன.

    மேலும் உலகம் முழுவதிலும் இருந்து திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து மேற்கண்ட பழங்கள், பூக்களை கொண்டு வந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று மதியம் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அப்போது வெளிநாட்டு பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட உள்ளது.

    நேற்று மதியம் ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறையினர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பரத்யேக பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர்.

    கட் பிளவர்கள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு அரங்கை அழகாக அலங்கரித்திருந்தாலும் மலையப்பசாமிக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாலைகள் சிறப்பாக இருந்ததாக, பக்தர்கள் தெரிவித்தனர்.

    ஸ்நாபன திருமஞ்சனத்தில் உற்சவருக்கு ஏலக்காய், வெட்டி வேர், உலர் திராட்சை, துளசி மாலைகளுடன் செய்யப்பட்ட மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. அத்துடன் பவள மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறை இயக்குனர் சீனிவாஸ் தலைமையில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழாவுக்காக தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லிச்சீஸ், ஆஸ்திரேலிய பிங்க், கருப்பு திராட்சை மற்றும் பல்வேறு நாடுகளின் பழங்கள் உற்சவர்களுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    Next Story
    ×