search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழா நிறைவு பெறுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. 4 மணியளவில் கொடிப்பட்டமானது வீதி உலா வந்தது.

    அதிகாலை 5.40 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடி மரத்தில் காப்பு கட்டிய அரிகரசுப்பிரமணிய பட்டர் கொடியினை ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 7.05 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பாபு, கோவில் கண்காணிப்பாளர்கள் சீதாலெட்சுமி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பணியாளர்கள், தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் அர. கருத்தப்பாண்டி, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், தி.மு.க. நகர செயலர் வாள் சுடலை மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். இரவு 7.30 மணியளவில் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது.

    7-ம் திருவிழா 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தான்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவை நடக்கிறது. 8.45 மணிக்கு வெற்றிவேர் சப்ரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    8-ம் திருவிழா நண்பகல் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி சண்முகர் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 12-ம் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×