search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு
    X

    பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு

    • பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எட்டிக்குளத்துபட்டியில் சித்தண்ணன், கசுவம்மாள், மதுரைவீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கோவிலில் திருவிழா நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் கோவிலில் திருவிழா தொடங்கியது. அப்போது கோவில் சன்னதியில் இருந்து மின்னொளி ரதத்தில் சாமிகள் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். உடன் பக்தர்களின் சேர்வையாட்டம், கரகாட்டம், வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைபெற்றது.

    இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பூசாரியிடம் பக்தர்கள் சாட்டை அடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலையில் சாமி, அந்த ஊர் குளத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கோவில் முன்பாக நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் வரிசையாக தரையில் அமர வைக்கப்பட்டனர். அப்போது கோவில் பூசாரி 'கோவிந்தா.. கோவிந்தா..' என்ற கோஷத்தை முழங்கியபடி பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்தார். அதன்பின்னர் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து குழந்தைகளுக்கு முடி எடுத்தல், காது குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற்றன. மேலும் பெண்கள் தாங்கள் பிறந்த வீட்டில் வாங்கி தந்த கூரை புடவையை கசுவம்மாள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அதனை உடுத்தினர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கிடையே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாட்டு முறையை காண பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலில் குவிந்தனர். திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×