search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா தொடங்கியது
    X

    சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா தொடங்கியது

    • தேரோட்டம் 8-ந்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது.
    • ஆடித்தபசு காட்சி 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நேற்று ெகாடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் அதிகாலை 5.32 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் நாளான 10-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

    அன்று மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசுகாட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.

    கொடியேற்ற விழா ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையதுறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

    கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி, சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×