search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவிலில் இன்று நடக்கிறது ஆனித்தேரோட்டம்
    X

    நெல்லையப்பர் கோவிலில் இன்று நடக்கிறது ஆனித்தேரோட்டம்

    • நெல்லையப்பர் கோவிலில் 2 ஆண்டுகளாக ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை.
    • இன்று 9 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து உள்ளது. தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் 4 ரத வீதிகளிலும் வலம் வரும். தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிக்கு வருகை புரிவார்கள்.

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி நடராஜபெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளளும், சுவாமி நடராஜப்பெருமாள் பச்சை சாத்தி எழுந்தருளளும் நடந்தது. மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

    நேற்று இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதி உலா, சுவாமி தங்க கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலாவும், நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், படையல் பூஜையும் நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் தேரோட்டமும் நடக்கிறது. 9 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர்கள், எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    தேரோட்டத்தையொட்டி இன்று (திங்கட்கிழமை) நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தேரோட்டத்தை காண வருவார்கள் என்பதால் 4 ரத வீதிகளிலும் கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காக வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் உதவி போலீஸ் கமிஷனர்கள் விஜயகுமார், அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    Next Story
    ×