search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    X

    பக்தர்கள் கூட்டத்தில் மிதந்து வரும் சுவாமி நெல்லையப்பர் தேரை படத்தில் காணலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    • தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
    • சுவாமி நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேராகும்.

    நெல்லை :

    தென் மாவட்டங்களில் புராதன சிறப்புமிக்க நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும்.

    இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கோவிலில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் உள்ளன. சுவாமி நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேராகும். இதன் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, அலங்கார தட்டுகளை சேர்த்து உயரம் சுமார் 70 அடியாக கொண்டுள்ளது.

    பல்வேறு சிறப்புகள் கொண்ட சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆனிப்பெருந் திருவிழா பிரசித்தி பெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் சுவாமி, அம்பாள் ஆகியோர் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

    காலை 9 மணிக்கு சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் முக்கிய பிரமுகா்கள் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அவர்களும் தேரோட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என விண்ணை முட்டும் கோஷத்துடன் தோ் 4 ரதவீதிகளிலும் வலம் வந்தது.

    அதனை தொடாந்து அம்பாள் தேரும், கடைசியாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள், பல்வேறு கட்சியினர் சார்பில் ரதவீதிகளில் அன்னதானம், தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    மேலும் மாநகராட்சி சார்பிலும் தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டு இருந்தது. ரதவீதிகள் முழுமையும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    அந்த பகுதிகளில் ஏற்கனவே 32 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், கூடுதலாக 13 காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. தேரோட்டத்தையொட்டி மாநகர பகுதி முழுவதும் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    முன்னதாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பழைய பேட்டை கண்டியபேரியில் தென்காசியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. ரதவீதிகளில் மாலை வரை மாநகர பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை.

    தேரோட்டத்தை காண கார், மோட்டார் சைக்கிள்களில் திரளானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு 8 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

    Next Story
    ×