search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா சுவாமி -அம்பாள் வீதிஉலா
    X

    நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா சுவாமி -அம்பாள் வீதிஉலா

    • வருகிற 10-ந்தேதி சுவாமி கங்காள நாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
    • 11-ந்தேதி (திங்கட்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

    நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 2-வது நாள் திருவிழாவையொட்டி காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் வீதிஉலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். மேலும் மாலை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இசை மற்றும் பொம்மலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. மேலும் கலையரங்கத்தில் சிறப்பு வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    வருகிற 10-ந்தேதி சுவாமி கங்காள நாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடைபெறுகிறது. 11-ந்தேதி (திங்கட்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்களில் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுவாமி தேரில் கம்புகள் வைத்து கட்டி, மரக்குதிரைகளும் பொருத்தப்பட்டு உள்ளன.

    நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி என்ற பெயரில் பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. நெல்லை உதவி வன பாதுகாவலர் ஹேமலதா நேற்று மாலை நெல்லையப்பர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து காந்திமதி யானையை நேரில் பார்வையிட்டார். பின்னர் யானைக்கு வழங்கப்படும் உணவு வகைகள், தற்போது பக்தர்களால் வழங்கப்பட்ட காலணி ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும் கோவில் வளாகத்தில் யானை குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நீச்சல்குளத்தையும் அவர் பார்வையிட்டார். அதை தொடர்ந்து யானையை நல்லமுறையில் பராமரிக்கும்படி பாகன்களுக்கு ஆலோசனை வழங்கிச்சென்றார்.

    Next Story
    ×