search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயார் திருவடி சேவை
    X

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயார் திருவடி சேவை

    • நவராத்திரி உற்சவம் கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.

    திருச்சி திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் விசேஷமானதாக கருதப்படும் நவராத்திரி உற்சவம் கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து நவராத்திரி கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்தவகையில் நவராத்திரியின் 5-ம் நாளான நேற்று வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று மாலை கமலவல்லி தாயார் (உற்சவர்) மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க உள் வீதிகளில் அரையர் சேவையினை கேட்டபடி வலம் வந்தார். அப்போது கமலவல்லி நாச்சியார் சந்திர சூரியன் சவுரி கொண்டை, நெத்தி பட்டை, கலிங்க தொரா, காசு மாலை, முத்து மாலை, பவள மாலை, தங்க நெல்லிக்காய் மாலை, வைரத்தாலான பெருமாள் பதக்கம், வலது ஹஸ்தத்தில் கிளி, இடது ஹஸ்தத்தில் திருஆபரணங்கள், வைர திருமாங்கல்யம், பாத சலங்கை, தோடா (சிலம்பு) அணிந்திருந்தார்.

    பின்னர், நவராத்திரி கொலு மண்டபத்தில் பொற்பாதங்கள் (திருவடி) தெரிய எழுந்தருளினார். அங்கு அவருக்கு அமுது செய்விக்கப்பட்டது. இதன் பின்னர் இரவு 9 மணிக்கு மேல் தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவித்தால் செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். இதனால் உறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தாயார் திருவடி சேவையை கண்டு தரிசித்து சென்றனர்.

    Next Story
    ×