search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னட ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை
    X

    கன்னட ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை

    • இந்தாண்டு கன்னட வருடப்பிறப்பில் ஆடி மாதம் ஜூலை 1-ந்தேதி பிறந்துள்ளது.
    • ஆடி 2-வது வெள்ளி பூஜை வருகிற 8-ந்தேதி நடப்பது குறிப்பிடத்தக்கது.

    மைசூரு சாமுண்டி மலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழா உலக புகழ்பெற்றது. கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் சாமுண்டீஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடப்படுவது வழக்கம். இதில் ஆடி வெள்ளிக்கிழமை பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மன் அருளை பெற்று செல்வார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சாமுண்டீஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை பூஜைகள் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்தாண்டு கன்னட வருடப்பிறப்பில் ஆடி மாதம் ஜூலை 1-ந்தேதி பிறந்துள்ளது. இதில் ஆடி மாதம் 1-ந்தேதியே முதல் வெள்ளிக்கிழமை வந்துள்ளது. இதைதொடர்ந்து சாமுண்டீஸ்வரி கோவில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை பூஜைகள் நடத்த தயார் நிலையில் இருந்தது. மேலும் ஆடி வெள்ளிக்கிழமை பூஜைகளில் கலந்துகொள்ள கொரோனா நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதாவது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 72 மணிநேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும் கோவிலுக்கு வந்துசெல்ல பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஆடி முதல் வெள்ளியான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதைதொடர்ந்து சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்த மைசூரு மன்னர் குடும்பத்தினரான மகாராணி பிரமோதா தேவி, இளவரசர் யதுவீர் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். இதற்கிடையே முன்னதாக மன்னர் குடும்பத்திற்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் நீண்ட வரிசையில் கால்கடுகு்க காத்திருந்து ஆடி முதல் வெள்ளியில் சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டனர். முகக்கவசம் அணிந்து, 72 மணிநேரத்திற்குள் பெறப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சாமி தரிசனத்திற்காக அதிகாலையிலேயே உள்ளூர் மட்டுமின்றி பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர். அதன்படி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை பூஜையையொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதேபோல் அரசியல் பிரமுகர்களான சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடா, மற்றும் ராமதாஸ், நாகேந்திரா எம்.எல்.ஏ.க்கள், பிரதாப் சிம்ஹா எம்.பி. ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழக்கப்பட்டது. மேலும் குடிநீர், கழிவறை, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையொட்டி கோவில் படுக்கட்டுகளில் பெண்கள் விளக்கேற்றியும், சந்தனம்-குங்குமம் இட்டும் தங்களது வேண்டுதலை செலுத்தினர். ஆடி முதல் வெள்ளக்கிழமை பூஜையையொட்டி சாமுண்டீஸ்வரி கோவில் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இதேபோல் ஆடி 2-வது வெள்ளி பூஜை வருகிற 8-ந்தேதி நடப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×