search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மீனாட்சி அம்மன் கோவிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் மெகா கொழுக்கட்டை படையல்
    X

    மீனாட்சி அம்மன் கோவிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் மெகா கொழுக்கட்டை படையல்

    • முக்குறுணி விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் மெகா கொழுக்கட்டை செய்து வழிபடுவது வழக்கம்.
    • முக்குறுணி என்பதால், 18 படி பச்சரிசியால் கொழுக்கட்டை செய்து படைத்து வழிபாடு நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு கரையில் முக்குறுணி விநாயகர் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறார். அம்மன் சன்னதியில் இருந்து சொக்கநாதராகிய சுந்தரேஸ்வரரை தரிசிக்கச் செல்லும் வழியில் தெற்கு பார்த்த வண்ணம் எட்டு அடி உயர 'முக்குறுணி விநாயகர்' எழுந்தருளி உள்ளார்.

    திருமலை நாயக்க மன்னர் அரண்மனை கட்டுவதற்காக, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே மண் எடுக்கப்பட்டது.

    அப்போது மண்ணுக்கடியில் இருந்து 8 அடி உயரமுள்ள 4 கரங்களுடன் முக்குறுணி விநாயகர் கிடைத்ததாகவும், பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் முக்குறுணி விநாயகரை, மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

    ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று, முக்குறுணி விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் மெகா கொழுக்கட்டை செய்து வழிபடுவது வழக்கம். 'குறுணி' என்றால் 6 படியாகும். முக்குறுணி என்பதால், 18 படி பச்சரிசியால் கொழுக்கட்டை செய்து படைத்து வழிபாடு நடக்கிறது. இதன்படி விநாயகர் சதுர்த்தியான நேற்று காலை முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது.

    பின்னர் 18 படி அரிசியில் செய்யப்பட்ட பெரிய கொழுக்கட்டையை காலை 9.30 மணிக்கு மேல் விநாயருக்கு படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையுடன் பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கொரோனா காரணமாக கடந்தாண்டு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் இந்தாண்டு விநாயகரை காண பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    Next Story
    ×