search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஈசனின் அரிய வடிவங்கள்
    X

    ஈசனின் அரிய வடிவங்கள்

    • சுருட்டப்பள்ளியில், சயன கோலத்தில் அருளும் சிவபெருமானை தரிசிக்க முடியும்.
    • வித்தியாசமான அரிய வடிவங்களில் சிவபெருமான் அருள்புரிவதை பார்க்கலாம்.

    பூலோகத்தில் படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு ஆலயங்கள் மிகவும் குறைவு. காக்கும் கடவுளான மகாவிஷ்ணுக்கும், அழிக்கும் கடவுளான சிவபெருமானுக்கும் எண்ணற்ற ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் மகாவிஷ்ணு, பெரும்பாலான ஆலயங்களில் உருவ தோற்றத்துடன்தான் காட்சி அளிப்பார்.

    சிவபெருமானோ ஓரிரு ஆலயங்களைத் தவிர, பெரும்பாலான ஆலயங்களில் சிவலிங்கத் தோற்றத்தில்தான் அருள்பாலிப்பதைக் காண முடியும். அப்படி இருந்தாலும், அதிலும் எண்ணற்ற வித்தியாசமான அரிய வடிவங்களில் சிவபெருமான் அருள்புரிவதை நாம் பார்க்கலாம்.

    அப்படிப்பட்ட சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    * தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ளது, திருநல்லூர் திருத்தலம். இங்கு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. பிருங்கி முனிவர், வண்டு வடிவம் எடுத்து சிவ பெருமானை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் மீது வண்டு துளைத்த அடையாளம் இருப்பதைக் காண முடியும்.

    * மயிலாடுதுறையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நீடூர். இங்கு அருட்சோம நாதர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது.

    * நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது, தலைச்சங்காடு என்ற ஊர். இங்கு சங்காரண்யேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. மகாவிஷ்ணு, சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கை பெற்ற காரணத்தால், இங்கு மூலவரான ஈசன், சங்கு வடிவில் காட்சி தருகிறார்.

    * கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கம் நெய் மலை போல் காட்சியளிப்பதை தரிசிக்க கண்கள் கோடி வேண்டும்.

    * பொதுவாகப் பெருமாள் கோவிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோவில்களில் மட்டும் சடாரி வைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வழக்கம் இருக்கிறது. அவை, காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில், காளஹஸ்தி சிவன் கோவில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோவில் ஆகியவை ஆகும்.

    * திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமவுலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவம் என்றும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகிறது.

    * ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை, காசியில் உள்ள 'அனுமன் காட்' காமகோடீஸ்வரர் கோவிலில் காணலாம்.

    * ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில், சயன கோலத்தில் அருளும் சிவபெருமானை தரிசிக்க முடியும்.

    * பெங்களூரூவுக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில், சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெய்யாக மாறுகிறது. இந்த வெண்ணெய்யை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

    * தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில் ராஜகம்பீர மண்டபத்தில், மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.

    Next Story
    ×