
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் கல்யாண உற்சவ சேவையை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் பெற வேண்டும்.
கல்யாண உற்சவ சேவை வருகிற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி வசந்த பஞ்சமி அன்று தொடங்குகிறது. பிப்ரவரி 12-ந்தேதி ஏகாதசி, ஏப்ரல் மாதம் 2-ந்தேதி யுகாதி பண்டிகை, ஏப்ரல் 16-ந்தேதி சைத்ரா பூர்ணிமா, மே மாதம் 21-ந்தேதி சிரவண நட்சத்திரம் ஆகிய நாட்களில் கல்யாண உற்சவ சேவை நடக்கிறது.
மேலும் ஜூன் மாதம் 11-ந்தேதி துவாதசி, 18-ந்தேதி சிரவண நட்சத்திரம், 25-ந்தேதி துவாதசி, ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி ரோகிணி நட்சத்திரம், செப்டம்பர் மாதம் 10-ந்தேதி பவுர்ணமி, அக்டோபர் மாதம் 22-ந்தேதி துவாதசி, நவம்பர் மாதம் 5-ந்தேதி துவாதசி ஆகிய நாட்களில் கல்யாண உற்சவ சேவை நடக்கிறது.
கல்யாண உற்சவ சேவை நிகழ்ச்சிகள் அனைத்தும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. பக்தர்கள் அதில் முன்பதிவு செய்து, தங்களின் வீடுகளில் இருந்தே பக்தி சேனலில் ஒளிப்பரப்புவதை தரிசிக்கலாம்.
கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற மூன்று மாதங்களுக்குள் ஒரு தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் 2 பேர் வந்து சீனிவாசமங்காபுரம் கோவிலில் இலவசமாக சாமி தரிசனம் செய்யலாம். அந்தப் பக்தர்களுக்கு ஒரு மேல்துண்டு, ஜாக்கெட் துணி, அட்சதை ஆகியவை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.