search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புஞ்சை சங்கேந்தி கிராமத்தில் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்
    X
    புஞ்சை சங்கேந்தி கிராமத்தில் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

    புஞ்சை சங்கேந்தி கிராமத்தில் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

    புஞ்சை சங்கேந்தி கிராமத்தில் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், புஞ்சை சங்கேந்தி கிராமத்தில் அருள் பாலித்து வரும் கனகாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில் 1955-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் கட்டி 70 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் பழுதடைந்தது. பின்னர், கிராம முக்கியஸ்தர்கள் கலந்து பேசி கிராமமக்கள் பங்களிப்புடன் கோவிலை சீரமைக்க முடிவெடுத்தனர். அதன்படி, அறநிலையத்துறை மூலம் ரூ.19 லட்சம் செலவில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது.

    கிராமத்தில் முக்கியஸ்தர்கள் மூலம் ஆலயத்தின் கோபுரங்கள் மற்றும் விமான கலசங்கள் சுமார் ரூ.80 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 12-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, ஷோடச கணபதி ஹோமம், தேவதை பூஜை, பூர்ணாஹீதி, வாஸ்து சாந்தி, விநாயகர் வழிபாடு, அஷ்டலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. 13-ந் தேதி தீர்த்த சங்கிரஹணம், மிருத் சங்கிரஹனம், முளைப்பாரி வைபவமும், 14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் கால யாக பூஜையும், 15-ந் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றன. நேற்று காலை 7.30 மணி அளவில் 4-ம் கால யாக பூஜையும், ரக்‌ஷா பந்தனம், நாடி சந்தனம், பிம்ப சுத்தி, காலை 10 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும், 10.30 மணிக்கு கைலாசநாதர் கோவில் விமான கலசங்களுக்கும், கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் உக்கடை தட்சிணாமூர்த்தி சிவாச்சாரியார், குமார் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து கைலாசநாதர் மூலஸ்தானம், கோவில் உள்ள விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட நவக்கிரகங்களுக்கும், பைரவர், துர்க்கை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி கிராம பொதுமக்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

    இரவு 10 மணியளவில் கைலாசநாதர் தங்கப் பல்லக்கிலும், செல்லாண்டி அம்மன் சிம்ம வாகனத்திலும், சப்பாணி கருப்பு குதிரை வாகனத்திலும், மாசி பெரியண்ணசாமி, மதுரைவீரன் சாமி, அய்யனார் சாமி யானை வாகனத்திலும், மின் மற்றும் புஷ்ப அலங்காரத்தில் வாண வேடிக்கையுடன் சாமிகள் புறப்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றன. அப்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×