search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேரோட்டத்தை முன்னிட்டு தேரை பொக்லைன் எந்திரம் கொண்டு தள்ளியபோது எடுத்த படம்.
    X
    தேரோட்டத்தை முன்னிட்டு தேரை பொக்லைன் எந்திரம் கொண்டு தள்ளியபோது எடுத்த படம்.

    குறைந்த அளவு பக்தர்களே பங்கேற்ற கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

    குடியாத்தம் கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளுடன் குறைந்த அளவு பக்தர்களுடன் நடைபெற்றது. கொரோனா தடை காரணமாக பொக்லைன் எந்திரம் மூலம் தேர் நகர்த்தப்பட்டது
    குடியாத்தம் கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளுடன் குறைந்த அளவு பக்தர்களுடன் நடைபெற்றது. கொரோனா தடை காரணமாக பொக்லைன் எந்திரம் மூலம் தேர் நகர்த்தப்பட்டது

    குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் பிரசித்தி பெற்ற கருப்புலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெறும் தேரோட்டம் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது. சுமார் 42 அடி உயரம் கொண்ட இந்த தேர் வேலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய தேர்களில் ஒன்றாகும்.

    தற்போது கொரோனா தொற்று அதிகரித்ததால் மாவட்ட நிர்வாகம் தேர் மற்றும் திருவிழாக்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    மாவட்ட நிர்வாகம் விதித்த விதி முறைகளை பின்பற்றி கருப்புலீஸ்வரர் ஆலயத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் கருப்புலீஸ்வரர்- சிவகாமசுந்தரி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து தேர் நிலை வரை ஊர்வலமாக குறைந்த அளவு பக்தர்களுடன் கொண்டு வரப்பட்டு தேரில் எழுந்தருளிக்கப்பட்டது.

    தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. 42 அடி உயரமும் பல டன் எடையும் கொண்ட இந்த தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தால் மட்டுமே நகர்த்த முடியும். இதனால் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து ஒரு சில அடிகள் வரை தேரை நகர்த்தினர். பின்னர் மீண்டும் பொக்லைன் எந்திரம் மூலம் தேரை நிலையில் நிறுத்தினர்.

    பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசம் அணிந்தும் தேருக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் இதனை தொடர்ந்து 2 மணி நேரம் கழித்து உற்சவர் மீண்டும் ஊர்வலமாக கோவிலுக்கு திரும்பினார்.
    Next Story
    ×