search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிதம்பரம் நடராஜர்
    X
    சிதம்பரம் நடராஜர்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 21-ந்தேதி தொடங்குகிறது

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி விழா, வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. 

    பின்னர் பல்வேறு பூஜைகளுக்கு பின் சாமி வீதி உலா நடைபெறும். மறுநாள்(செவ்வாய்க்கிழமை) வெள்ளி சந்திர பிரபை வாகனத்திலும், 23-ந் தேதி (புதன்கிழமை) தங்க சூரிய பிரபை வாகனத்திலும், 24-ந்தேதி (வியாழக்கிழமை) வெள்ளி பூத வாகனத்திலும், 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெள்ளி ரிஷப வாகனத்திலும் தெருவடைச்சானிலும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    26-ந்தேதி (சனிக்கிழமை) வெள்ளி யானை வாகனத்திலும், 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்க கைலாச வாகனத்திலும் சாமி வீதிஉலா நடக்கிறது. தொடர்ந்து 28-ந்தேதி மாலை தங்க ரதத்தில் சாமி பிச்சாண்டவர் கோலத்தில் வீதிஉலா வருகிறார்.29-ந்தேதி முக்கிய விழாவான தேர்த்திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை 5.30 மணி அளவில் கோவில் சித்சபையில் இருந்து மூலவரான ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி தேரில் எழுந்தருள்கிறார். பின்னர் தனித்தனி தேர்களில் வீதி உலா நடக்கிறது.

    வரும் 30-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை கோவில் ராஜ சபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் சாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து திருவாபரண அலங்காரமும், மதியம் 3 மணி அளவில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது. 31-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப் பல்லக்கில் வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. ஜனவரி 1-ந்தேதி இரவு கோவில் தீர்த்த குளமான ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×