search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்
    X
    திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்

    திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை டிசம்பர் 9-ந்தேதி வரை தரிசிக்கலாம்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மாலையில் பஞ்சமூர்த்திகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் கொடி மரத்துக்கு முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் தங்க விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக எழுந்தருளினர்.

    சரியாக மாலை 6 மணிக்கு கோவில் கொடிமரம் முன், இறைவிக்கு இறைவன் தன் உடலின் சரிபாதியை கொடுத்ததை விளக்கும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் வலம் வந்து ஒரு நிமிடம் தரிசனம் தந்தார்.

    அப்போது சிவாச்சாரியார்கள் பஞ்சமுக தீபாராதனை காட்ட பக்தர்கள் அண்ணாமலை யாருக்கு அரோகரா என்று கோ‌ஷமிட சங்கு, தாளம், பெருந்தாள், பேரிகைகள் முழங்க சிவதொண்டர்கள் ஆனந்த நடனமாட, மலையை நோக்கி தீப்பந்தங்கள் காட்ட, அதிர்வேட்டுகள் முழங்க 2 ஆயிரத்து 668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மீது தீபம் ஏற்றப்பட்டது.

    கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக மகா தீப தரிசன நாளில் கோவில் வளாகத்தில் ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வெளியூர் பக்தர்கள் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    இதனால் தீப தரிசனத்தை நேரடியாக காண முடியாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். உள்ளூர் பக்தர்கள் வீடுகளில் இருந்தபடியே மகா தீபத்தை தரிசித்தனர்.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை டிசம்பர் 9-ந்தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு டிசம்பர் 30-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட் பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    ஒவ்வொரு ஆண்டும் தீபவிழா முடிந்ததும் தெப்பல் உற்சவம் கோவிலுக்கு வெளியே உள்ள அய்யங்குளத்தில் நடக்கும். நெருப்பாக இருக்கும் இறைவனை ஆற்றுப்படுத்தும் விதமாக தெப்பல் உற்சவம் நடத்தப்படும்.

    ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவில் வளாகத்திலேயே தெப்பல் உற்சவம் இன்று நடக்கிறது.

    கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் உற்சவர் சந்திரசேகர் அம்பாளுடன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி தெப்பல் உற்சவத்தில் பங்கேற்று குளத்தை 3 முறை வலம் வருவார்.

    இந்த நிகழ்ச்சியை காணவும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தொடர்ந்து தெப்பல் உற்சவம் 3 நாட்கள் நடக்கிறது.
    Next Story
    ×