search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி கோவில்
    X
    பழனி கோவில்

    கார்த்திகை திருவிழா: பழனி கோவிலில் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

    பழனி முருகன் கோவில் திருக்கார்த்திகை திருவிழாவில், ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கலெக்டர் விஜய லட்சுமி தெரிவித்துள்ளார்.
    பழனி முருகன் கோவில் திருக்கார்த்திகை திருவிழாவில், ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கலெக்டர் விஜய லட்சுமி தெரிவித்துள்ளார்.

    பழனி முருகன் கோவில் திருக்கார்த்திகை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பழனி முருகன் கோவிலில், கடந்த 1.9.2020 முதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதில் படிப்பாதை வழியாக மட்டும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில், திருக்கார்த்திகை திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் 29-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, மாலை 4 மணிக்கு சாயரட்சை, மாலை 6.05 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் ஆகியவை நடைபெறுகின்றன. அதை தொடர்ந்து திருஆவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகிஅம்மன் கோவிலிலும் தீபம் ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    கார்த்திகை தீபம் ஏற்றும்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கார்த்திகை தினத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் மூலம் தொலைக் காட்சி, முகநூல், யூடியூப் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு தலா ஆயிரம் பக்தர்கள் வீதம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மதியம் 12 மணிக்கு மேல் வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதேநேரத்தில் www.tnh-r-ce.gov.in எனும் இணையதளத்தில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும். முன்பதிவு செய்துவரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கைகளை சுத்தம் செய்வதற்கும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×