search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அன்னாபிஷேகம்
    X
    அன்னாபிஷேகம்

    சிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்

    அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.
    ஐப்பசி மாதமும், அந்த மாதத்தில் வரும் பவுர்ணமி தினமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியில், அனைத்து ஆலயங்களிலும்.. குறிப்பாக சிவாலயங்கள் தோறும் ‘அன்னாபிஷேகம்’ நடைபெறும். அன்றைய தினம் லிங்கத்திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்படும். ‘அன்னம்’ என்பதற்கு ‘உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது’ என்று பொருள் உண்டு.

    தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அன்னத்தை தனக்கானதாக மட்டுமே வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களால் இறைவனையும், இறையருளையும் அடைய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பக்தர்களுக்கும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமிஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

    ஐப்பசி பவுர்ணமி அன்று சிவன் கோவிலில் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனை செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.

    ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.
    Next Story
    ×