search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கண்ணமங்கை பக்தவச்சலப் பெருமாள்
    X
    திருக்கண்ணமங்கை பக்தவச்சலப் பெருமாள்

    கல்யாண கோலத்தில் அருள்பாலிக்கும் பக்தவச்சலப் பெருமாள்

    திருக்கண்ணமங்கை பக்தவச்சலப் பெருமாள் திருக்கோவிலில் இறைவனின் கல்யாண கோலத்தை அனுதினமும் தரிசிக்க வேண்டும் என்பதற்காக, தேவர்கள் அனைவரும், தேனீக்களாக உருவெடுத்து கூடுகட்டி, அதிலிருந்தபடியே பார்த்து மகிழ்வதாக ஐதீகம்.
    திருவாரூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்கண்ணமங்கை. இங்குள்ளது பக்தவச்சலப் பெருமாள் திருக்கோவில். முன்காலத்தில் இந்த இடம் ‘கிருஷ்ணாரண்யம்’ என்று அழைக்கப்பட்டது. இந்த வனத்தில் வசித்த பிருகு முனிவருக்கு மகளாக அவதரித்தாள், லட்சுமி தேவி. இத்தலத்தின் திருக்குளத்தில் தோன்றிய அந்த தேவியை தரிசிக்க, தேவர்கள் அனைவரும் கூடினார்கள். ஐராவதம் என்னும் வெள்ளை யானை, தங்கக் கலசத்தில் தீர்த்தம் கொண்டு வந்து லட்சுமிக்கு அபிஷேகம் செய்தது. அதானாலேயே இங்குள்ள தாயார், ‘அபிஷேகவல்லி’ என்று அழைக்கப்படுகிறாள்.

    பிருகு முனிவரோ, தன் மகளை ‘கிருஷ்ண மங்கை’ என்று அழைத்தார். இதுவே பிற்காலத்தில் ‘திருக்கண்ணமங்கை’ என்று இத்தலம் பெயர் பெறக்காரணம். ‘மகளை, பகவான் கிருஷ்ணருக்கே மணம் முடிக்க வேண்டும்’ என்று காத்திருந்தார் பிருகு முனிவர். அதன்படியே பக்தவத்சலன் என்ற திருப்பெயரோடு வந்த இறைவன், லட்சுமிதேவியை மணந்துகொண்டார்.

    இங்கு இறைவனும், இறைவியும் மங்களமான கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். கிருஷ்ணருக்கும், லட்சுமிக்கும் திருமணம் நடைபெற்ற தலம் என்பதால், அதைக் காண தேவர்கள் பலரும் குவிந்தனர். மேலும் இங்குள்ள இறைவனின் கல்யாண கோலத்தை அனுதினமும் தரிசிக்க வேண்டும் என்பதற்காக, தேவர்கள் அனைவரும், தேனீக்களாக உருவெடுத்து கூடுகட்டி, அதிலிருந்தபடியே பார்த்து மகிழ்வதாக ஐதீகம். இன்றும் தாயார் சன்னிதியின் வடக்கு பக்கம் உள்ள சாளரத்தின் மீது தேன் கூடு இருப்பதை காண முடியும்.
    Next Story
    ×