search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு அர்ச்சகர் கற்பூர ஆரத்தி காண்பித்த காட்சி.
    X
    ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு அர்ச்சகர் கற்பூர ஆரத்தி காண்பித்த காட்சி.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாக் சவாரி நிகழ்ச்சி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாக் சவாரி நிகழ்ச்சி நடந்தது. அதில் ஜீயர்சுவாமிகள், வேதப் பண்டிதர்கள் பங்கேற்று நாளாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை பாடினர். நிகழ்ச்சி ஏகாந்தமாக நடந்தது.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார் என்பவர் இருந்தார். அவர் தினமும் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்து, பூச்சூடுவதற்காக ஏரி அமைத்து, நந்த வனம் ஒன்றையும் அமைத்திருந்தார். அந்த நந்த வனத்தில் ஏராளமான மலர் செடிகள் இருந்தன. நந்த வனத்தில் அடிக்கடி பூக்கள் சிதறுவதை அனந்தாழ்வார் பார்த்தார். இரவில் யாரோ பூக்களை பறிக்கிறார்கள் என்று சந்தேகப்பட்ட அவர், ஒரு நாள் கண் விழித்திருந்து கண்காணித்தார்.

    அப்போது ஏழுமலையானும், பத்மாவதி தாயாரும் நந்த வனத்தில் பூக்களை பறித்து விளையாடினார்கள். இருவரும் பெருமாளும், பிராட்டியும் என்பதை அறியாத அவர் இருவரையும் கட்டிப்போடுவதற்காக விரட்டினார். பெருமாள் தப்பி விட்டார். பத்மாவதி தாயார் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை தோட்டத்தில் உள்ள செண்பக மரத்தில் அனந்தாழ்வார் கட்டிப்போட்டு விட்டார்.

    மறுநாள் ஏழுமலையானுக்கு பூஜைகள் செய்ய சென்ற அர்ச்சகர்கள் அவரது மார்பில் பத்மாவதி தாயார் இல்லாததை கண்டு திடுக்கிட்டனர். அப்போது ஏழுமலையான் அசரீரியாக நடந்த சம்பவங்களை சொல்லி அனந்தாழ்வாரையும் மரத்தில் கட்டிப்போடப்பட்டுள்ள பெண்ணையும் கோவிலுக்கு அழைத்து வரும்படி கூறினார்.

    அதன்படி அனந்தாழ்வாரையும் அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்றனர். கோவில் சன்னதிக்குள் சென்றதும் அந்தப் பெண் இவர் (அனந்தாழ்வார்) எனது தந்தை என்று சொல்லிய படியே ஏழுமலையானின் சிலையோடு ஐக்கியமாகி மறைந்து விட்டார். நந்த வனத்தில் பூக்களை பறித்து விளையாடியவர்கள் பெருமாளும், பிராட்டியும் என்பதை அனந்தாழ்வார் உணர்ந்தார்.

    அனந்தாழ்வார் இயற்கை எய்தி ஏழுமலையானின் திருவடியில் இணைந்தார். அவர் தற்போதும் திருமலை நந்த வனத்தில் மகிழ மரமாக இருப்பதாக கருதப்படுகிறது. பிரம்மோற்சவ விழா முடிந்த மறுநாள் அனந்தாழ்வாரின் அவதார நிகழ்ச்சி, பாக் சவாரி நிகழ்ச்சியாக நடைபெறும். அதில் உற்சவர் மலையப்பசாமி பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

    அந்த பாக் சவாரி நிகழ்ச்சி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்தது. ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். உற்சவருக்கும், அனந்தாழ்வார் தோட்டத்தில் உள்ள மகிழ மரத்துக்கும் சிறப்புப்பூஜைகள் நடந்தது. அதில் ஜீயர்சுவாமிகள், வேதப் பண்டிதர்கள் பங்கேற்று நாளாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை பாடினர். நிகழ்ச்சி ஏகாந்தமாக நடந்தது.
    Next Story
    ×