search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
    X
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி பரிவேட்டை விழா நடக்குமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

    கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் நவராத்திரி பரிவேட்டை விழா நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே எழுந்து உள்ளது.
    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. 5 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ந்தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தினமும் குறைந்த அளவு பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா வருகிற 17-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடக்கிறது.

    17-ந்தேதி காலையில் அம்மன் கொலுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. திருவிழா நாட்களில் இரவு அம்மன் வாகன பவனி நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    அதேசமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் 10-ம் திருவிழாவான 26-ந்தேதி விஜயதசமியன்று நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை விழா நடத்துவது சம்பந்தமாக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும், அதனால் பரிவேட்டை விழா நடத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்க வில்லை என்றும் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணைஆணையர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.

    இதனால் இந்த ஆண்டு கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் நவராத்திரி பரிவேட்டை விழா நடக்குமா? என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்து உள்ளது. ஆனால் பக்தர்கள் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் நவராத்திரி பரிவேட்டை விழாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே காலங் காலமாக நடந்துவந்த நவராத்திரி பரிவேட்டை விழாவை தடைபடாமல் இந்த ஆண்டும் வழக்கம் போல் நடத்தவேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பரிவேட்டைவிழாவை இந்த ஆண்டும் வழக்கம் போல் நடத்த அரசு அனுமதி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
    Next Story
    ×