search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தமிழக பக்தர்கள் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு 9 திருக்குடைகள்
    X
    தமிழக பக்தர்கள் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு 9 திருக்குடைகள்

    தமிழக பக்தர்கள் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு 9 திருக்குடைகள்

    தமிழக பக்தர்கள் சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 திருக்குடைகளை இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வழங்கினார்.
    சென்னை :

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தின் போது, ஆண்டு தோறும், தமிழகத்தில் இருந்து 2 மங்கல பொருட்கள் திருமலையில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, மற்றொன்று திருப்பதி திருக்குடைகள். ஆதிசேஷனின் அம்சமே திருப்பதி திருக்குடைகளாகும்.

    உணவு உற்பத்திக்கு தேவையான மழையை, போதிய அளவு அருளும்படி இறைவனிடம் வேண்டி, வேங்கடமுடையானுக்கு வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக தமிழகம் வழங்கி வருகிறது. தமிழக பக்தர்கள் சார்பில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கும், திருமலை வெங்கடேஸ்வர சாமி கோவிலுக்கும் திருக்குடைகளை வழங்கும் புனித ஆன்மிக பணியை இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் செய்து வருகிறது.

    சென்னை பூக்கடை அருகில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் தொடங்கும் திருப்பதி திருக்குடை உபய உற்சவ ஆன்மிக ஊர்வலம், 5 நாள் பாதயாத்திரையாக செல்லும். அதை, ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் தரிசிப்பார்கள். இந்த ஆண்டு, கொரோனா பரவல் தடுக்கும் நோக்கத்துடன், மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடு விதித்திருப்பதால், திருக்குடை ஆன்மிக ஊர்வலம் தவிர்க்கப்பட்டது. கடந்த 20-ந்தேதி, சென்ன கேசவ பெருமாள் கோவிலில், 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளுக்கு, எளிய முறையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி திருக்குடைகள் கடந்த 21-ந்தேதி மாலை திருப்பதி சென்று சேர்ந்தன. அதில் இரண்டு திருக்குடைகளை, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் துணை நிர்வாக அதிகாரி ஜான்சி ராணி மற்றும் உதவி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோரிடம், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி வழங்கினார்.

    திருமலையில் உள்ள ஜீயர் மடத்தில், 9 திருக்குடைகளுக்கும் நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், இந்த திருக்குடைகளை திருமலை-திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோரிடம், இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி நேற்று வழங்கினார். ஏழுமலையான் கோவிலில் நடைபெற இருக்கும் கருட வாகன சேவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட திருக்குடைகள் அலங்கரிக்கப்படுகிறது.
    Next Story
    ×