search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆதிகேசவ பெருமாள்
    X
    ஆதிகேசவ பெருமாள்

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருவிழா நடத்த வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருவிழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் சேவா டிரஸ்ட் தலைவர் அனந்தகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருடத்துக்கு 2 முறை, அதாவது ஐப்பசி, பங்குனி மாதங்களில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆறாட்டுடன் நிறைவுபெறும். இதேபோல திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலிலும் நடைபெறும்.

    2 கோவில்களிலும் ஒரே நாளில் திருவிழா, ஆறாட்டுகள் நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த பங்குனி மாத திருவிழா பத்மநாபசுவாமி கோவிலில் நடைபெறவில்லை. பின்னர் தேவபிரசன்னம் பார்த்து தற்போது பங்குனி திருவிழா கொடியேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அங்குள்ள மன்னர் அரண்மனையில் இருந்தும், கோவிலில் இருந்தும் திருவிழா தொடர்பான கடிதம் வழக்கம்போல் திருவட்டார் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவிழா கொடியேற்றம், ஆறாட்டு நடத்த எந்த நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இது பக்தர்களை மனவேதனை அடையச் செய்துள்ளது.

    இதுதொடர்பாக மன்னர் குடும்பத்தினரும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே குமரி மாவட்ட பக்தர்கள் இதுதொடர்பாக போராட்டம் நடத்த ஆலோசித்து வருகிறார்கள். திருவிழா நடத்தப்படாதது ஆகம விதிமுறைகளுக்கு மாறாக அமைந்துள்ளது. எனவே திருவிழா மற்றும் ஆறாட்டு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கொரோனா தொற்று காலத்தில் எந்த கோவிலிலும் திருவிழா நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை. அதன்படி திருவட்டார் கோவிலிலும் திருவிழா நடத்தப்படவில்லை. அரசு உத்தரவிட்டால் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்படும். அரசு உத்தரவை மீறி நாங்களாக எந்த முடிவும் எடுக்கமுடியாது என்றனர்.

    Next Story
    ×