search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபம் வெறிச்சோடியதை படத்தில் காணலாம்.
    X
    பவானி கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபம் வெறிச்சோடியதை படத்தில் காணலாம்.

    கொரோனா முழு ஊரடங்கால் தமிழகத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா

    கொரோனா முழு ஊரடங்கால் தமிழகத்தில் ஆற்றங்கரையோர பகுதிகள் பக்தர்கள் கூட்டமின்றி ஆடிப்பெருக்கு விழா களை இழந்தது.
    தமிழகத்தில் காவிரி நுழையும் மாவட்டமான தர்மபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின்போது காவிரி ஆற்றங்கரையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து புனித நீராடுவார்கள். பின்னர் அந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 4 மாதங்களாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. குறிப்பாக ஆடிப்பெருக்கு நாளான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டங்கள் களை இழந்தன.

    சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றங்கரையில் திரளுவார்கள். குறிப்பாக புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றங்கரையில் புனித நீராடி அங்குள்ள காவேரியம்மன் சமேத தேசநாதேஸ்வரர் கோவிலில் தாலி கயிற்றை மாற்றி வழிபடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாக ஆடிப்பெருக்கு விழாவிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

    இதனால் அங்குள்ள ஆற்றங்கரையோர பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. இதேபோல் ஒகேனக்கல்லில் உள்ள சாலைகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. போலீசார் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதே போல மேட்டூரிலும் ஆடிப்பெருக்கு விழா களை கட்டுவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கையொட்டி நேற்று காவிரி ஆற்றில் யாரும் நீராடக்கூடாது என்று சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் நேற்று மேட்டூரில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. அதே நேரத்தில் பொதுமக்கள் வருகையை கண்காணிக்க மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் கூட்டமாக காணப்படும் மேட்டூர் காவிரி ஆற்றங்கரை படித்துறை, காவிரி பாலம், பூங்கா, முனியப்பன் கோவில் ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறையில் காவிரி, பவானி நதிகளுடன் கண்ணுக்கு புலப்படாத தேவர்களின் அமுதநதியும் சங்கமிப்பதாக ஐதீகம். இதனால் ஆடிப்பெருக்கு அன்று பவானி கூடுதுறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி புனித நீராடி அங்குள்ள சங்கமேஸ்வரரை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வந்ததையொட்டி, நோய் தொற்று பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு காவிரிக்கரையோரத்தில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஆடிப்பெருக்கான நேற்று பவானி கூடுதுறைக்கு பக்தர்கள் யாரும் வரவில்லை. இதனால் அங்குள்ள கூடுதுறை படித்துறை பகுதியானது பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பக்தர்கள் யாரும் நுழையாதிருக்க கோவில் வளாகத்தின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல் கொடுமுடி, அம்மாபேட்டை, ஊஞ்சலூர் காவிரிக்கரையோர பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவில்லை.

    ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின் போது ஆயிரக்கணக்கானோர், கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் கூடி, புனிதநீராடி வழிபடுவார்கள். ஆனால் நேற்று கொள்ளிடம் ஆற்றங்கரை வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சிலர் மட்டும் அதிகாலை நேரத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரைக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து, வழிபட்டனர்.

    மேலும் ஒரு சில புதுமண தம்பதிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து கொள்ளிடம் ஆற்றில் நீராடினர். பின்னர் புத்தாடை அணிந்து கரையோரம் மண்ணால் விநாயகர் பிடித்து வைத்து விளக்கேற்றி, படையலிட்டு வழிபட்டனர். அப்போது புதுமண தம்பதியர் தங்களது திருமண மாலைகளை காவிரி தண்ணீரில் விட்டு வழிபட்டனர். பொது முடக்கத்தால் பெரும்பாலான பொதுமக்கள், தங்களது வீடுகளிலேயே படையலிட்டு பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.

    கடலூர் சில்வர் பீச்சிற்கு புனித நீராடி வழிபட சென்ற பொதுமக்களையும், புதுமண தம்பதிகளையும் போலீசார் மறித்து, அவர்களை திருப்பி அனுப்பி விட்டனர். ஒரு சிலர் மாற்றுப்பாதையில் தங்களது குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்திருந்தனர். புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கடற்கரையில் சாமிக்கு படையல் வைத்து வழிபட்டனர். இதை தொடர்ந்து புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை கடலில் விட்டு வழிபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்சி மாவட்டத்தில் நேற்று ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. அம்மா மண்டபம் படித்துறை, கீதாபுரம் படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்டவை ஆட்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள அனைத்து படித்துறைகளும் இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. படித்துறைகளில் யாரேனும் பூஜைகள் நடத்துகிறார்களா? என போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி இருந்தனர். மேலும், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட மோட்டார் சைக்கிளில் காவிரி ஆற்றுக்கு வந்த ஒரு சில புதுமண ஜோடிகளையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரும்பாலானோர் வீடுகளிலேயே காவிரி தாயை மனதில் நினைத்து வழிபாடு நடத்தினர்.

    உள்ளூர் பகுதிகளை சேர்ந்த ஒரு சில குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதிகள் மட்டும் ஆங்காங்கே காவிரி கரையோரத்தில் வாழை இலையை விரித்து அதன் மீது பழங்கள் மற்றும் பூஜைபொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதிகள் ஆங்காங்கே காவிரி கரையோரத்தில் நின்று செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    Next Story
    ×