search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீட்டிலேயே வரலட்சுமி விரதம் மேற்கொண்டு வழிபட்ட பெண்கள்
    X
    வீட்டிலேயே வரலட்சுமி விரதம் மேற்கொண்டு வழிபட்ட பெண்கள்

    அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை: வீட்டிலேயே வரலட்சுமி விரதம் மேற்கொண்டு வழிபட்ட பெண்கள்

    ஆடி மாத 3-வது வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. வீட்டிலேயே பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு வழிபட்டனர்.
    கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திருச்சி சமயபுரம், உறையூர் வெக்காளியம்மன், தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில்கள் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்கள் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்றும் மூடப்பட்டு தான் இருந்தது.

    அம்மன் கோவில் சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளை கண்டு களிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் அவர்கள் வெளியில் நின்றே கற்பூரங்கள் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். அதே நேரத்தில் சாலையோர அம்மன் கோவில்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிறிய அம்மன்கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. வளையல் அலங்காரம், ரூபாய் நோட்டு அலங்காரங்களில் ஜொலித்த அம்மன் உருவங்களை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதுபோல் தொட்டியம் அருகே உள்ள கிளிஞ்சநத்தம் மகாமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்புபூஜை நடைபெற்றது. காவிரியாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யபட்டது. பின்னர் பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    சமயபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பைஞ்ஞீலியில் உள்ள வனத்தாயிஅம்மன் கோவில், துறையூர் தீப்பாஞ்சி அம்மன், பாலக்காட்டு மாரியம்மன், சாலை மாரியம்மன், வேம்பழகு மாரியம்மன், பாலக்கரை பெரிய மாரியம்மன், அங்காள பரமேஸ்வரியம்மன் உள்ளிட்ட குறைந்த வருவாய் உள்ள சிறிய அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் அம்மன் பாதத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் சரடு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதற்கிடையே நேற்று வரலட்சுமி விரதம் என்பதால் பெண்கள் தங்களது தாலிபாக்கியம் நிலைக்கவும், கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ்வதற்காகவும் சுமங்கலி பூஜைகளை செய்தனர். பூஜை முடித்த பின்னர் மஞ்சள் கயிறு, குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ ஆகியவற்றை சுமங்கலி பெண்களுக்கு தானமாக வழங்கினார்கள். மாநகரில் பெரிய கோவில்கள் அடைக்கப்பட்டு இருந்ததால் பெண்கள் வீட்டிலேயே சுமங்கலி பூஜை நடத்தினார்கள்.

    துறையூரை சுற்றியுள்ள கிராமங்களில் பெண்கள் காலை முதல் கையில் நோன்புக் கயிறு கட்டிக்கொண்டு மாலை வரை மகாலட்சுமி அம்மனுக்கு விரதம் மேற்கொண்டார்கள். இதற்காக அவரவர் வீடுகளில் அம்மனின் திருவுருவத்தை வடிவமைத்து வளையல் அலங்காரம் செய்து சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து மஞ்சள், குங்குமம் மற்றும் பூ கொடுத்து அவர்களிடம் ஆசிபெற்றனர். சமயபுரம் பகுதியில் வீட்டில் உள்ள அம்மன் படங்களுக்கு மாலை அணிவித்தும், பொங்கல், சுண்டல், பழங்கள், வளையல்கள் வைத்தும்,தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து பக்தியுடன் வழிபட்டனர்.
    Next Story
    ×