search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதையும், சர்வ அலங்காரத்தில் மீனாட்சி அம்மனையும் படத்தில் காணலாம்.
    X
    கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதையும், சர்வ அலங்காரத்தில் மீனாட்சி அம்மனையும் படத்தில் காணலாம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் தொடங்கியது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தி நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சுவாமிக்கு தனியாகவும், அம்மனுக்கு தனியாகவும் திருவிழா நடக்கும். சுந்தரேசுவரருக்கு நடைபெறும் விழாக்களில் சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி மாதம் நடைபெறும் விழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. அதே போன்று மீனாட்சி அம்மனுக்கு ஆடி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும்.

    ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பார்கள். விவசாயிகள் ஆடி மாதத்தில் விதைத்து விவசாய பணியை தொடங்குவதையும், பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபடுவதையும் ஆடி முளைக்கொட்டு விழா குறிக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு உற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மீனாட்சி அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் காலை 10.50 மணிக்கு சிவகுமார் என்ற வேலாயுதபட்டர் கொடியை ஏற்றினார்.

    அங்கு எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் மீனாட்சி அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் பல்வேறு வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஆனால் தற்போது அம்மன் ஆடி வீதியில் வலம் வருவதற்கு பதிலாக சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் காலை, மாலை என இரு வேளையும் வலம்வருகிறார்.

    ஆடிப்பூரம் தினத்தன்று (24-ந் தேதி) காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னதி மகாமண்டபம் பள்ளியறை முன்பு அம்மனுக்கு ஏற்றி இறங்குதல் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
    Next Story
    ×