search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி
    X
    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி

    சதுரகிரியில் களையிழந்த ஆடி அமாவாசை திருவிழா: பக்தர்கள் இன்றி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு பூஜை

    ஆடி அமாவாசை திருவிழாவுக்காக சதுரகிரி வந்த பக்தர்கள் மலையடிவாரத்திலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். கூட்டத்தை கட்டுப் படுத்த விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் ஒரு நாள் அமாவாசை, பவுர்ணமி என 3 நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், வனத்துறை சார்பிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிவது வழக்கம்.

    தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வனத்துறை நுழைவுவாயில் முன்பு சாமி தரிசனம் செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இந்தநிலையில் கோவிலின் முக்கிய திருவிழாவான லட்சக்கணக்கானோர் பங்குபெறும் ஆடி அமாவாசை திருவிழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறாது, பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம், வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆடி அமாவாசையான நேற்று பக்தர்கள் இல்லாமல் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பன்னீர் என 21 வகையான அபிஷேகம் காலை 6 மணி முதல் 9.30 மணி வரை நடந்தது. பின் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கொரோனா தொற்றின் காரணமாக 31-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளதாலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு கூட சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று விருதுநகர் கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டிருந்தார்.

    தாணிப்பாறை மலையடிவார பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் தலைமையில் போலீசார் தாணிப்பாறை விலக்கு, மகாராஜபுரம் விலக்கு, மாவூத்து பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மதுரை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் உள்பட 150-க்கும் மேற்பட்ட போலீசார் வருஷநாடு பிரிவு, வாழைத்தோப்பு பகுதியில் இருந்து தாணிப்பாறை மலையடிவாரம் வரை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×