search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமஞ்சனம்
    X
    திருமஞ்சனம்

    அற்புத பலன்தரும் திருமஞ்சனம்

    சிவபெருமான் ஒரு அபிஷேகப் பிரியர். எனவே அவரது மனம் குளிரும் வகையில், விதவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அதை நேரில் கண்டுகளித்தால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
    வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என ஒரு நாளை, இப்படி ஆறு பொழுதுகளாக பிரித்துவைத்துள்ளனர் ஆன்மிக சான்றோர்கள். இதை அடிப்படையாக கொண்டுதான், பெரும்பாலான பிரசித்தி பெற்ற ஆலயங்களில் தினமும் 6 கால பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆறு பொழுதுகளும் மனிதர்களைத் தவிர, தேவர்களுக்கு வேறு கால அளவைக் கொண்டதாக இருக்கும்.

    அதாவது ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த வகையில் தேவர்களுக்கு ‘வைகறை’ பொழுது என்பது, மனிதர்களுக்கு மார்கழி மாதமாக உள்ளது. தேவர்களுக்கு காலைப்பொழுது என்பது நமக்கு மாசி மாதம். தேவர்களின் உச்சி காலத்தை, நாம் சித்திரை மாதமாக கொண்டிருக்கிறோம். நமக்கு ஆனி மாதமாக இருப்பது, தேவர்களுக்கு மாலைப் பொழுதாகும். தேவர்களின் இரவு நேரம், நமக்கு ஆவணி மாதம். தேவர்களுடைய அர்த்த ஜாமம் என்பதை, நாம் புரட்டாசி மாதமாக வைத்திருக்கிறோம்.

    இந்த ஆறு காலங்களில் நடக்கும் வழிபாடுகள், அபிஷேகங்கள் இறைவனை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும், குளிர்ச்சிப்படுத்தும். இதை மெய்ப்பிக்கும் வகையில்தான் சிவாலயங்களிலேயே பிரசித்தி பெற்றதாகவும், முதலில் தோன்றியதாகவும் கருதப்படும் சிதம்பரத்தில், நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மட்டுமே அபிஷேகம் செய்வார்கள்.

    மாசி சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகியவையே, அந்த ஆறு அபிஷேக நாட்கள் ஆகும். இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம், பூஜைகள் சிறப்பானதாக கருதப்படுகிறது.

    இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்பு, அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள். அதிலும் ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ‘ஆனி திருமஞ்சனம்’ மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. ‘திருமஞ்சனம்’ என்றால் ‘புனித நீராட்டல்’ என்று அர்த்தமாகும். ஆனி திருமஞ்சனம் அன்று, ஈசனை பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள். மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த இந்த புண்ணிய தினத்தில், சிவாலயங்களுக்குச் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும். பெரும்பாலான சிவாலயங்களில் அதிகாலை 3 மணியில் இருந்தே அபிஷேகம் ஆரம்பமாகிவிடும்.

    சிதம்பரம், உத்தரகோசமங்கை உள்பட சில ஆலயங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது. இந்த தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள். ஆச்சரியங்கள் நிறைந்த திருவண்ணாமலையிலும் ஆனி திருமஞ்சனம் மிக விமரிசையாக நடைபெறுவதைக் காணலாம். ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது, ஆனி திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு ‘ஆனி உத்திரம்’ என்றும் பெயர் உண்டு.

    சிவபெருமான் ஒரு அபிஷேகப் பிரியர். எனவே அவரது மனம் குளிரும் வகையில், விதவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அதை நேரில் கண்டுகளித்தால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்படும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு ஷோடச (16 வகை தீபங்கள்) ஆராதனைக் காட்டுவார்கள்.

    நடராஜரின் இடது பாகம், சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கத்தையும், இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபட வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியையும் பெற முடியும். அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தைக் குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும். அபிஷேகம் முடிந்த பிறகு இறைவனும், இறைவியும் ஆனந்தத் தாண்டவமாக நடனம் ஆடியபடி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.

    ஆனித் திருமஞ்சனம் விழா முதன் முதலில் பஞ்ச பூதத்தலங்களில் வானத்தைக் குறிக்கும் சிதம்பரம் தலத்தில்தான் தோன்றியது. பதஞ்சலி மகரிஷி இந்த திருவிழாவைத் தொடங்கி வைத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. என்றாலும் மற்ற சிவாலயங்களிலும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடத்தப்படுகிறது.

    குறிப்பாக திருவண்ணாமலை தலத்தில் ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்துகிறார்கள். திருமஞ்சனத்துக்கு முந்தைய தினம், மாலை நடராஜப் பெருமான் புறப்பாடாகி எழுந்தருள்வார். இரண்டாம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு வரும் அவர், வல்லாள மகாராஜா கோபுரத்தை கடந்து ஆயிரம் கால் மண்டபத்துக்கு வந்து சேருவார். ஆண்டுக்கு இரண்டு தடவை மட்டுமே ஆயிரம் கால் மண்டபத்துக்கு நடராஜப்பெருமான் எழுந்தருள்வார். ஒன்று மார்கழி திருவாதிரை தினம். மற்றொன்று ஆனி திருமஞ்சனம். எனவே ஆனி திருமஞ்சன நாளில் ஆயிரம் கால் மண்டபத்திற்கு எழுந்தருளும் நடராஜரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். அன்றிரவு முழுவதும் சிவகாமசுந்தரி சமேதராக நடராஜர், அந்த மண்டபத்தில் தங்கியிருப்பார். மறுநாள் அதிகாலையில் ஆனி திருமஞ்சனம் நடைபெறும்.

    தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில்கள் பலவும் திறக்கப்படாமல் இருக்கிறது. இருப்பினும் ஆலயங்கள் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்கள் அனுமதிக்கபடாமல் இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் மட்டும் முறையாக செய்யப்பட்டு வருகின்றன. எனவே அனைவரும் வீட்டிலேயே இருந்து இறைவனை நினைத்து வழிபடுங்கள். இல்லையெனில் கூட்டம் சேராமல் அருகில் இருக்கும் சிவாலயத்தின் வெளியே நின்று இறைவனை தரிசித்து வரலாம்.
    Next Story
    ×