search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
    X
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேரோட்டத்தை கோவில் வளாகத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    ஆடி மாதம் 1-ந்தேதி ஆடிப்பூரம் தினம் ஆண்டாள் பிறந்த தினமாகும். இந்த ஆண்டு ஆடிப்பூரம் தினம் நாளை (வியாழக்கிழமை) வருகிறது. இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் அர்ச்சகர், நிர்வாகிகள், ஸ்தலதார்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். ஆண்டுதோறும் 9 நாட்கள் திருவிழா களை கட்டும். தினமும் கோவில் முன் புறம் உள்ள ஆடிப்பூரம் கொட்டகையில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் என விழா மிகச் சிறப்பாக இருக்கும்.

    தேரோட்ட தினத்தன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விட்டு சிறப்பு பஸ்களை இயக்கி பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.

    கொரோனா பரவலால் கிராமப்புற கோவில்களை தவிர அனைத்து இடங்களிலும் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோவில் வளாகத்தின் உள்ளேயாவது நடத்த அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கம் பக்தர்கள் மனதில் ஏற்பட்டது.

    இதனிடையே ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறநிலைத்துறை ஆணையருக்கு, ஆண்டாள் கோவில் தேர் திருவிழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சிகள், இதைத் தொடர்ந்து நடைபெறும் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகள், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆகியவற்றை கோவிலுக்கு உள்ளேயே நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும், அரசு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் கடிதம் அனுப்பப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, கோவில் வளாகத்திற்கு உள்ளேயே கொடியேற்ற விழாவையும், தேர் திருவிழாவையும் நடத்த அனுமதி அளித்துள்ளார். இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் கூறுகையில், தேர் திருவிழா கொடியேற்றம், அதைத் தொடர்ந்து நடைபெறும் 9 நாள் திருவிழாக்களும் பக்தர்கள் யாருமின்றி கோவில் நிர்வாகத்தினர், அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தலதார்கள் பங்கேற்கும் வகையில் அரசு உத்தரவுப்படி நடைபெறும். கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் கோவில் வளாகத்திற்குள் நடைபெறும் தேரோட்டம் ஆகியவற்றை பொதுமக்கள் யூடியூப் மூலம் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் நடைபெறும் இந்த தேர் திருவிழாவிற்கு அரசு உத்தரவுப்படி யாருக்கும் அனுமதி கிடையாது“ என்று தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து கோவிலுக்குள்ளேயே தேர்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நாளை காலை 10 மணி முதல் 11 மணிக்குள் நடைபெறுகிறது. இதேபோல் தேரோட்ட நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது.
    Next Story
    ×