search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காசி
    X
    காசி

    அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்

    காசியில் கருடன் பறக்காமைக்கும் பல்லி ஒலிக்காமைக்கும் காரணமானவர் பைரவர்தான். இந்த சாபம் இன்று வரை தொடரும் அதிசயம். இதற்கான கதையை அறிந்து கொள்ளலாம்.
    சில தலங்களுக்கென தனித்துவங்கள் உண்டு. காசிக்கு ஐந்து அதிசயங்களைச் சொல்வார்கள். காசியில் கருடன் பறப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை; மாடு முட்டுவதில்லை; பூக்கள் மணப்பதில்லை; எரிக்கப்படும் பிணங்கள் நாறுவதில்லை.இந்த அதிசயங்களில் காசியில் கருடன் பறக்காமைக்கும் பல்லி ஒலிக்காமைக்கும் காரணமானவர் பைரவர்தான். காசி நகரைச் சுற்றி 45 மைல் பரப்பளவில் கருடன் பறப்பதில்லை என்கிறார்கள்.

    இராவணனை வதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்ய நி னைத்தார் இராமபிரான். காசிக்குச் சென்று சிவலிங்கம் ஒன்று கொண்டு வருமாறு அனுமனுக்குக் கட்டளையிட்டார். அனுமன் காசிக்குச் சென்றார். அங்கு எங்கு பார்த்தாலும் சிவலிங்கங்கள் இருந்தன. அந்த லிங்கங்களில் எந்த லிங்கம் சுயம்பு லிங்கம் என்று புரியாமல் தடுமாறினார் அனுமன்.அந்த நேரத்தில் அவருக்குத் துணை செய்ய நினைத்தார் மகா விஷ்ணு. விஷ்ணுவின் அருளால் அவருடைய வாகனமான கருடன் ஒன்று பறந்து வந்தது. ஒருகுறிப்பிட்ட லிங்கத்துக்கு மேல் வட்டமடித்தது. பல்லியும் அதே நேரத்தில் நல்லுரை சொல்வ துபோல ஒலித்தது.இந்த இரண்டு குறிப்புகளையும் புரிந்து கொண்ட அனுமன், அந்த லிங்கம்தான் சுயம்பு லிங்கம் என்று உணர்ந்து, அச்சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிப் பறக்கலானார்.

    காசிக்கு காவல் தெய்வம் பைரவர். எட்டு பைரவர்கள் காசி நகரின் எட்டு திசைகளிலிருந்து காவல் செய்வதாக ஐதீகம்.சிவலிங்கத்துடன் வந்த அனுமனைத் தடுத்த பைரவர், “என்னுடைய அனுமதியில்லாமல் காசியில் இருக்கும் லிங்கத்தை நீ எப்படி பெயர்த்துச் செல்லலாம்?” என்று கேட்டார்.

    அனுமன், பைரவரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், “என் தெய்வமான இராமபிரானின் உத்தரவு. அதனால் லிங்கத்தை எடுத்துக் கொண்டு செல்கிறேன்” என்று சொன்னார்.அனுமனின் பதிலில் திருப்தியடையாத பைரவர் அனுமனுடன் சண்டையிட்டார். இருவருக்கும் கடும் போர் நடந்தது. வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அந்தப் போர் அமைந்தது. அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வதைக் கண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் கவலையில் ஆழ்ந்தார்கள்.

    அவர்களுள் சிலர் காசி நகரைநோக்கி விரைந்தார்கள். கால பைரவரை வணங்கினார்கள். “சுவாமி! உலக நன்மைக்காக இந்த சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு தென்னாடு போக அனுமனுக்கு அனுமதி தரவேண்டும். ஸ்ரீஇராமபிரான் இந்த லிங்கத்துக்குப் பூஜை செய்வதற்காக சேதுவில் காத்திருக்கிறார். எனவே அனுமனை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்கள்.

    தேவர்களின்வேண்டுகோளுக்கு இணங்கினார் பைரவர். மனசாந்திஅடைந்தார். சிவலிங்கத்தை க் கொண்டுபோக அனுமதித்தார்.

    அனுமனுக்குச்சரியான லிங்கத்தை அடையாளம் காட்டியது கருடனும் பல்லியும். அனுமனுக்குத் துணைபுரிந்த கருடன் இனிமேல் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும்; காசியில் பல்லிகள் இருந்தாலும் அவை ஒலிக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார் பைரவர். பைரவரின் கட்டளைப்படிதான் காசியில் இன்றும் கருடன் பறப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை என்கிறார்கள்.
    Next Story
    ×