search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரமணர்
    X
    ரமணர்

    அதிகம் பேசாமல் உலகை வென்ற ரமணர்

    பல நூறு ஆண்டுகளுக்கு முன், இமயமலைக் குகைகளிலும், அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்த அந்தக் கால ரிஷிகளின் வரலாற்று எச்சமாக, கடந்த நூற்றாண்டில் நமது கண்முன் வாழ்ந்த துறவி ஸ்ரீரமண மகரிஷி.
    துறவிகளுக்கு உரிய அடையாளமான வெறும் கோவணத்தை மட்டுமே ஆடையாகக் கொண்டு, மவுன மொழியையே பேருரையாக வழங்கி, உலக மக்களால் ஈர்க்கப்பட்டு, ‘பகவான்’ என்றும், ‘கடவுளின் அவதாரம்’ என்றும் உயிர்ப்போடு அழைக்கப்பட்ட ஒரே மகான் ஸ்ரீரமண மகரிஷி.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன், இமயமலைக் குகைகளிலும், அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்த அந்தக் கால ரிஷிகளின் வரலாற்று எச்சமாக, கடந்த நூற்றாண்டில் நமது கண்முன் வாழ்ந்த துறவி ஸ்ரீரமண மகரிஷி. அவர் இறைவனோடு ஐக்கியமாகி 70 ஆண்டுகள் ஆகிறது.

    ரமண மகரிஷியின் வாழ்க்கை முழுவதுமே அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தவை.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழி என்ற சிறிய கிராமத்தில் சுந்தரம் அய்யர் - அழகம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த ரமணருக்கு, பெற்றோர் வைத்த பெயர் வேங்கடராமன் அய்யர்.

    இவரது தந்தையின் மாமாவும், தந்தையின் சகோதரரும் சன்னியாசி ஆனவர்கள் என்பதாலோ என்னவோ, வேங்கடராமன் சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தார்.

    வேங்கடராமனுக்கு 12 வயது ஆனபோது அவரது தந்தை மரணம் அடைந்தார். அப்போதே அவரது மனதில், ‘மரணம் என்பது என்ன?’, ‘மரணத்திற்குப் பிறகு அந்த உயிர் என்ன ஆகிறது?, எங்கே போகிறது?’ என்ற வினாக்கள் குடைந்தெடுத்தன.

    தந்தையை இழந்ததால், சித்தப்பாவின் பொறுப்பில் விடப்பட்ட வேங்கடராமன், 1891-ம் ஆண்டு மதுரை சென்றார். அங்கு அவருக்கு கல்வியில் நாட்டம் செல்லவில்லை.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அவரை வெகுவாகக் கவர்ந்தது. அதிக நேரம் அந்தக் கோவிலிலேயே செலவிட்டார்.

    அப்போது சேக்கிழார் எழுதிய 63 நாயன்மார்களின் சரித்திரமான பெரிய புராணத்தைப் படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

    நாயன்மார்களின் பக்தியால், அவர்களுக்கு இறைவன் நேரில் தோன்றினான் என்ற வரலாறு அவரது மனதில் ஆழப்பதிந்தது.

    ‘நாமும் இதே போல பக்தி செய்தால், இறைவன் நம் முன் தோன்றித் தான் ஆக வேண்டும்’ என்ற எண்ணம் அவர் மனதில் வேர் ஊன்றியது.

    அந்த சமயத்தில் அவர், கன்னட இதிகாசம் ஒன்றின் வாயிலாக திருவண்ணாமலை என்ற ஊர் பெயரைக் கேள்விப்பட்டார். அந்தப் பெயர் ரமணரின் உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.

    அதோடு அவர் மனதில், ‘நான் யார்? உடலா? ஆன்மாவா?’, ‘மரணம் என்பது என்ன?’, ‘மரணத்தில் உடல் அழிகிறதா? உயிர் அழிகிறதா? அடுத்த பிறவி உண்டா?’ என்ற கேள்விகள் நீடித்துக் கொண்டே இருந்தன.

    இதே நினைவில் படுத்து இருந்த ஒரு நாள் இரவு, வேங்கடராமன் தனது உடலுக்குள் ஏதோ ஆவேசம் புகுந்தது போல உணர்ந்தார். அவரது உடல் விறைத்தது. மரணத்துக்கு மிகச் சமீபம் சென்றது போன்ற உணர்ச்சியைப் பெற்றார். அரை மணி நேரம் கழித்து அவர் சாதாரண நிலைக்குத் திரும்பினார். இதன் மூலம் அவருக்கு மரண பயம் நீங்கியது.

    இந்த அதிசய நிகழ்வுக்குப் பிறகு வேங்கடராமன் யாருடனும் அதிகம் பேசுவது இல்லை.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் நேரத்தை அதிகப்படுத்தினார். அங்கு 63 நாயன்மார்கள் சிலைகள் இருக்கும் இடத்திலும், நடராஜர் சிலை இருக்கும் இடத்திலும் அதிக நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.

    கல்வியில் நாட்டம் இல்லாமல், கோவிலே கதி என்று கிடப்பதால், உறவினர்களின் கோபத்துக்கு ஆளானார்.

    இதைத் தொடர்ந்து, இனிமேல் தனது இருப்பிடம் திருவண்ணாமலை என்று முடிவு செய்து, விேசஷ வகுப்புக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு, 3 ரூபாயை எடுத்துக் கொண்டு 1896-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி திருவண்ணாமலைக்குப் புறப்பட்டார்.

    வழியில், கையில் இருந்த பணம் காலியானதால், மாம்பழப்பட்டு என்ற ஊரில் இருந்து திருக்கோவிலூர் வழியாக நடந்தே 1896-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி திருவண்ணாமலை சென்றடைந்தார்.

    அங்கு சென்றதும் திருவண்ணாமலை குளத்தில் மூழ்கி எழுந்த அவர், தனது பூனூலை அகற்றினார். கட்டி இருந்த வேட்டியில் கோவணம் என்ற அளவுக்கு துணியைக் கிழித்து மற்றவற்றை குளத்தில் வீசினார். கோவணத்தை மட்டுமே அணிந்து கொண்டு, யாரிடமும் தீட்சை பெறாமல், தன்னைத்தானே துறவியாக ஆக்கிக் கொண்டார்.

    திருவண்ணாமலை கோவிலுக்குள் சென்ற வேங்கடராமன், முதலில் சில நாட்கள் அங்குள்ள ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தார். ஆனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் வரவே, யாருமே அதிக அளவில் வராத பாதாள லிங்கம் இருக்கும் அறைக்குள் சென்று அமர்ந்து தியானம் செய்தார். அப்போது அவருக்கு வயது 19.

    6 வார காலம் அவர் அங்கேயே அமர்ந்து இருந்ததால், அவர் மீது பூச்சிகள் ஊர்ந்து அவரைக் கடித்து காயப்படுத்தின. ஆனாலும் அவர் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தியானத்தில் இருந்தார்.

    உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த அவரை, சேஷாத்திரி சுவாமிகள் என்ற சாது, வெளியே தூக்கிக் கொண்டுவந்து சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.

    அதன் பிறகும் வேங்கடராமன் தொடர்ந்து திருவண்ணாமலையில் உள்ள பல குகைகளிலிலும், சுற்றுப்புறங்களிலும் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.

    1902-ம் ஆண்டு சிவப்பிரகாசம் பிள்ளை என்பவர் வேங்கடராமனை சந்தித்தார். வேங்கடராமன் பேசாமல் மவுனமாகவே இருப்பதால், ஒரு சிலேட்டைக் கொண்டு சென்று அதில் 14 கேள்விகளை எழுதி, அவற்றுக்கான பதில்களைப் பெற்றார்.

    அந்தத் தகவல் ‘நான் யார்?’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பகவான் ரமணர் பெயரில் வெளியான புத்தகம் இது ஒன்று மட்டுமே என்பது குறிப் பிடத்தக்கது.

    1907-ம் ஆண்டு கணபதி சாஸ்திரிகள் என்பவர் வந்து வேங்கடராமனைப் பார்த்தார். ‘இவர் இறைவன் அருளைப் பூரணமாகப் பெற்றுவிட்டார்’ என் பதை அறிந்த கணபதி சாஸ்திரிகள், வேங்கடராமனை, ‘பகவான் ஸ்ரீரமணர்’ என்று அழைத்தார்.

    வேங்கடராமன், ஸ்ரீரமணர் என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருப்பதை அறிந்த, அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அங்கே வந்து அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் திருவண்ணாமலையை விட்டு வர முடியாது என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார்.

    இதைத் தொடர்ந்து, அவரது தாயார் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் திருவண்ணாமலைக்கு வந்து சன்னியாசம் வாங்கிக் கொண்டு பகவான் ஸ்ரீரமணருடன் தங்கி இருந்தார்கள்.

    நாளடைவில் ரமணரின் புகழ் உலகம் முழுவதும் பரவியது.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் திருவண்ணாமலைக்கு வந்து ரமணரைச் சந்தித்தார்கள்.

    இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் பிரண்டன், பிரபல எழுத்தாளர் சாமர் செட்மாம் ஆகியோரும் ரமணரை சந்தித்து ஆன்மிக தெளிவு பெற்றார்கள்.

    1948-ம் ஆண்டு ரமணரின் இடது கையில் ஒரு கட்டி ஏற்பட்டது. அது புற்றுநோய்க் கட்டி என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஆனாலும் குணம் ஆகவில்லை.

    நோய் முற்றிய நிலையில், 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8.47 மணிக்கு பகவான் ஸ்ரீரமணர், இறை ஜோதியில் ஐக்கியம் ஆனார்.

    அப்போது வானத்தில் பிரகாசமான ஒளி தோன்றியதாகக் கூறப்படுவது உண்டு.

    அதிகம் பேசாமல், பெரும்பாலும் மவுனமாகவே இருந்து அருள்பாலித்த பகவான் ஸ்ரீரமணர் பற்றி, உலகம் இன்றளவும் பேசிக் கொண்டே இருப்பதில் வியப்பு இல்லை.
    Next Story
    ×