search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவில்
    X
    நாகராஜா கோவில்

    நாகராஜா கோவில் பற்றிய 30 வழிபாட்டு தகவல்கள்

    நாகர்கோவில் நாகாராஜா கோவிலில் புற்று மண் பிரசாதம், நாகர் பிரதிஷ்டை, நூலும் பாலும் நைவேத்தியம், பாலாபிஷேகம், பால் பாயாசம் ஆகிய ஐந்தும் முக்கியமானதாகும்.
    1. நாகர்கோவில் நாகாராஜா கோவிலில் புற்று மண் பிரசாதம், நாகர் பிரதிஷ்டை, நூலும் பாலும் நைவேத்தியம், பாலாபிஷேகம், பால் பாயாசம் ஆகிய ஐந்தும் முக்கியமானதாகும்.

    2. நாகராஜா ஆலயத்தில் காலை 4 மணிக்கும், பகல் 10 மணிக்கும் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.

    3. உத்திராயணம், தெட்சிணாயணம் தொடங்கும் போது நிறைபுத்திரி பூஜை செய்வது வழக்கம் ஆகும். முதல் நெல்லை கொண்டு வந்து நாகருக்கு படைத்து பூஜை செய்வதை நிறைபுத்திரி பூஜை ஆகும்.

    4. நாகர்கோவில் நாகராஜா ஆலயத்தில் சிவனும், அனந்தகிருஷ்ணனும் பிரதிஷ்டை செய்திருப்பதால் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த தலம் திகழ்கிறது.

    5. நாகராஜா ஆலயம் ஒருகாலத்தில் சமணர்கள் தியானம் செய்யும் பள்ளியாக இருந்தது. இதனால் ஆலயத்தின் தூண்களில் சமணர்கள் சிற்பத்தை பார்க்க முடிகிறது.

    6. நாகராஜா கோவில் அமைந்துள்ள இடம் ஆதிகாலத்தில் கோட்டாறு என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.

    7. நாகராஜா ஆலயத்துக்குள் இப்போதும் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. அடிக்கடி பக்தர்கள் பாம்பு செல்வதை பார்ப்பார்கள். ஆனால் அந்த பாம்புகள் யாரையும் தீண்டியது இல்லை.

    8. நாகாஜா ஆலயத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாம்புகள் யாரையும் தீண்டாது என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    9. ஆலயத்தின் பின்புறம் உள்ள மிகப்பெரிய தீர்த்த குளத்துக்குள் ஏராளமான பாம்புகள் இருக்கின்றன. இதனால் அந்த தீர்த்த குளத்தை பூட்டி வைத்து இருக்கிறார்கள்.

    10. நாகராஜா ஆலயத்தின் அனந்தகிருஷ்ணர் கடுசர்க்கரையால் செய்யப்பட்டவர். இதனால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை.

    11. இந்த ஆலயத்தில் மொத்தம் 13 சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு சன்னதிக்கும் ஒவ்வொரு வரலாற்று சிறப்புடன் பின்னணி சுவாரசியங்கள் உள்ளன.

    12. நாகராஜா ஆலயத்தின் காவல் தெய்வமாக நாகமணி பூதத்தான் கருதப்படுகிறார். இவரது தனி சன்னதி பிரகார சுற்றுப்பாதையில் உள்ளது.

    13. நாகராஜா ஆலயத்தின் பூஜைகள் அனைத்தும் கேரளாவின் தாந்தீரிக முறைப்படி நடத்தப்படுகின்றன.

    14. நாகராஜா ஆலயத்தின் முன்பகுதியில் ரோட்டுக்கு பக்கத்தில் மிகப்பெரிய தீர்த்த குளம் இருந்தது. ஒரு காலத்தில் இந்த குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. அந்த குளத்தை மண் போட்டு மூடி மாநகராட்சி தனது இடம் என்று கையகப்படுத்தி உள்ளது.

    15. நாகராஜா ஆலயத்தில் நடத்தப்படும் பூஜை முறைகள் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், நோய் தீர்ப்பது போன்ற அனைத்துக்கும் ஒரேமாதிரியாக தான் இருக்கும். பூஜைகள் ஒன்றாக இருந்தாலும் சங்கல்பங்கள் மாறுபடும்.

    16. நாகராஜா ஆலயத்தில் பூஜை செய்யும் ‘பாம்பு மேக்காடு’ இல்லத்தை சேர்ந்தவர்கள் பரம்பரையாகவே நாகத்தை வழிபடுபவர்கள். பாம்புகளைக் குழந்தைகள் போல் வளர்ப்பவர்கள்.

    17. தொழு நோயை குணப்படுத்தும் ஓடவள்ளி செடியைத் திரும்ப நட்டு வளர்க்க முயற்சித்துப் பலனில்லாமல் போயிற்று.

    18. நாகராஜர் ஆலயத்தைச் சுற்றி உள்ள பூந்தோட்டங்கள் அழகு மிக்கவை. இத்தோட்டத்தில் உள்ள நாகப்பூவை நாகராஜரின் உருவகக் குறியீடாகக் கருதுகின்றனர்.

    19. நாகராஜா கோவிலையும், அதனைச் சார்ந்த தோட்டங்களையும் நாகங்கள் காவல்புரிகின்றன என்பது ஐதீகம்.

    20. சில ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் குளத்தின் அருகே இரண்டு தாலைப்பாம்பு ஒன்று கிடைத்தது. அண்மைக்காலம் வரை அதன் உடல் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    21. நாகராஜா கோவில் கிழக்கு நோக்கி அமைந் திருந்தாலும் மகாமேருமாளிகை என்று அழைக்கப்படும் தெற்கு வாயில் வழியாகத் தான் பக்தர்கள் செல்கின்றனர்.

    22. அர்த்த மண்டபத்தில் உள்ள தூண்களிலும், சுவரிலும் சமணர்கள் வணங்கும் பார்சுவநாதர், மகாவீரர், பத்மாவதி ஆகியோர் உருவங்களும், இந்து சமயத்தவர் வணங்கும் முருகன், கிருஷ்ணன், பத்மநாப சுவாமி தட்சிணாமூர்த்தி ஆகியோர் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன.

    23. உயிரினங்கள் அனைத்தும் இறைவனை வழிபடும் என்ற கருத்தினை விளக்கும்படி இக்கோயிலில் சிலைகள் உள்ளன. மனிதனும் குரங்கும், காகமும் சிவலிங்க வழிபாடு செய்யும் காட்சிகள் இக்கோவிலில் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

    24. துர்காதேவி ஆலயமும், கோயில் முகப்பிலே காணப்படும் இரண்டு அரசமரங்களும் பெண்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்றன. பிள்ளைப்பேறு வேண்டுவோர் நாகச்சிலைகளால் சூழப்பட்ட அந்த மரங்களைச் சுற்றி வலம் வந்தால் பலனடைவர் என்பது மக்கள் நம்பிக்கை.

    25. துர்க்கா தேவி சங்குச் சக்கரதாரியாய் நாற்கரங்களுடன் திருமாலின் அம்சமாகக் காட்சி தந்து அருள் புரிகின்றார்.

    26. பாலமுருகன் கோயில் அருகே இடும்பனுக்கும் இங்கே ஒரு சன்னதி உள்ளது.

    27. 1980-ம் ஆண்டில் இருந்து நாகராஜா ஆலயத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    28. கேரளத்தாரின் புத்தாண்டு ஆவணி மாதத்திலே தான் தொடங்குகின்றது. அந்த அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதி மக்கள் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தக்கோவிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றதாகத் தெரிய வருகிறது. அது இன்றும் தொடர்கிறது.

    29. நாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தில் ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்படும் திருவிளக்கு அலங்காரம் கொங்கு நாட்டு விளக்கு என்று அழைக்கப்படுகிறது.

    30. நாகர்கோவில் நாக ராஜர் கோவிலில் காணப் படுவது போன்று கல்லிலே செதுக்கப்பட்ட பாம்பின் சிலைகள் திருச் செங்கோட்டிலும் காணலாம்.

    Next Story
    ×