search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டை மாரியம்மன்
    X
    கோட்டை மாரியம்மன்

    கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம் நாளை நடக்கிறது

    திருமங்கலம் நாடார் இளைஞர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் நாளை கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நாளை (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி காணிக்கை செலுத்தப்படுகிறது.

    இதையொட்டி திண்டுக்கல் பெரிய கடைவீதியில் உள்ள நாடார்கள் பேட்டையில் நாளை மதியம் 12 மணிக்கு கோட்டை மாரியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அப்போது மாரியம்மனுக்கு மாவிளக்கு, பூஜை படையல், நைவேத்தியம், முளைப்பாரி ஆகியவற்றை காணிக்கை செலுத்தி வழிபாடு நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் தொடங்குகிறது. இதில் மாதர் சங்கத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்கின்றனர். இந்த ஊர்வலம் 4 ரதவீதிகள் வழியாக வலம் வந்து, கோட்டைக்குளத்தை சென்றடைகிறது. அங்கு முளைப்பாரி செலுத்தப்படுகிறது.

    இதையடுத்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த பால்குட ஊர்வலம் பெரியகடைவீதி நாடார்கள் பேட்டையில் உள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படுகிறது. பின்னர் 4 ரதவீதிகள் வழியாக பால்குடம் ஊர்வலமாக வந்து கோட்டை மாரியம்மன் கோவிலை சென்றடைகிறது. அங்கு கோட்டை மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    பின்னர் கோவில் முன்மண்டபத்தில் மாதர் சங்கத்தினரால் பூக்கோலம், மாக்கோலமிடப்படுகிறது. மாலை 6 மணிக்கு தேவி-பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் கோட்டை மாரியம்மனுக்கு சந்தன காப்பு, நைவேத்தியம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக சுண்டல், புளியோதரை ஆகியவை வழங்கப்படுகின்றன.

    இரவு 9 மணிக்கு கோவில் கலையரங்கில் நண்பர்கள் இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்க தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் பூமண்டலம், உதவி செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாதர் சங்கத்தினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×