search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடி மரத்திற்கு மகா தீப ஆராதனை நடைபெற்றதையும், சர்வ அலங்காரத்தில் சாமி-அம்பாள் எழுந்தருளியதையும் காணலாம்.
    X
    கொடி மரத்திற்கு மகா தீப ஆராதனை நடைபெற்றதையும், சர்வ அலங்காரத்தில் சாமி-அம்பாள் எழுந்தருளியதையும் காணலாம்.

    ராமேசுவரம் கோவிலில் சிவராத்திரி விழா தொடங்கியது

    ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 22-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    ராமேசுவரம் கோவிலின் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான காலை 10 மணிக்கு சாமி சன்னதி எதிரே நந்தி மண்டபம் அருகே உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்பு கொடிமரத்திற்கு புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன. அப்போது கொடி மரம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமி-அம்பாளுக்கு மகாதீப ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் தக்கார் ராஜா குமரன் சேதுபதி, ராணி லட்சுமி குமரன் சேதுபதி, இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் ஜெயா, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், அ.தி.மு.க. நகர் செயலாளர் கே.கே.அர்ச்சுனன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்ற நிகழ்வு, பூஜைகளை சர்வசாதகம் சிவமணி தலைமையில் பாஸ்கரஜோஷி குருக்கள் செய்தார். இரவு சாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    விழாவின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சாமி-அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதிவுலா வருதலும், இரவு 8 மணிக்கு சாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 22-ந் தேதி மாசி மகா சிவராத்திரியன்று காலை 10 மணிக்கு சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

    மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் 3-வது நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பாடாகி கெந்தமாதன பர்வதத்தில் உள்ள ராமர் பாத மண்டகப்படிக்கு எழுந்தருள்கின்றனர்.

    அதையொட்டி நாளை காலை 6 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு இரவு வரையிலும் பக்தர்கள் யாரும் கோவிலில் தரிசனம் செய்வதற்கோ, 22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த தகவலை திருக்கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×