search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தை தேர் திருவிழா நாளை தொடங்குகிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தை தேர் திருவிழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு தை தேர் திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தை தேர் திருவிழாவும் முக்கியமான ஒன்றாகும். பூபதி திருநாள் என்றும் இது அழைக்கப்படுகிறது. தை தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருள்வது சிறப்புக்குரிய ஒன்றாகும்.

    இந்த ஆண்டு தை தேர் திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி நாளை அதிகாலை 2.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 3 மணிக்கு கொடியேற்ற மண்டபத்தை அடைகிறார். அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.15 மணிக்குள் கொடி ஏற்றப்படுகிறது. 6.30 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

    மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் பல்லக்கில் புறப்பட்டு உள் திருவீதி வலம் வந்து சந்தனு மண்டபத்தை இரவு 8.15 மணிக்கு சென்றடைகிறார். 8.45 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளி அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறைக்கு செல்கிறார்.

    இரண்டாம் நாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து ஒற்றை பிரபையில் புறப்படுகிறார். உள்வீதி வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக காலை 6.30 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைகிறார். மாலை 4.30 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து புறப்பட்டு 5 மணிக்கு வாகன மண்டபத்தை அடைகிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்வீதி வலம் வந்து இரவு 9.45 மணிக்கு கண்ணாடி அறைக்கு செல்கிறார்.

    பிப்ரவரி 1-ந்தேதி (சனிக்கிழமை) நம்பெருமாள் அதிகாலை 4.15 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்படுகிறார். காலை 5.15 மணிக்கு சிம்ம வாகனத்திலும், மாலை 6.30 மணிக்கு யாளி வாகனத்திலும் புறப்பட்டு உள் வீதிகளில் வலம் வருகிறார். 2-ந்தேதி கருட சேவையாகும். அதிகாலை 5.15 மணிக்கு இரட்டை பிரபையிலும், மாலை 6 மணிக்கு கருட வாகனத்திலும் எழுந்தருளி உள் வீதிகளில் வலம் வருகிறார்.

    3-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலையில் ஹனுமந்த வாகனத்திலும், 4-ந்தேதி அதிகாலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலையில் யானை வாகனத்திலும் புறப்பட்டு உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    5-ந்தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பாடாகி நெல்லளவு கண்டருளுகிறார். பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதி சென்றடைகிறார்.

    6-ந்தேதி காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளும் நம்பெருமாள் மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு வையாளி கண்டருளுகிறார்.

    பிப்ரவரி 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு தை தேர் மண்டபத்தை சென்றடைகிறார். 5.15 மணியில் இருந்து 5.45 மணிக்குள் தேரில் எழுந்தருளுகிறார். காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

    8-ந்தேதி சப்தாவரணம் ஆகும். அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்படும் நம்பெருமாள் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    9-ந்தேதி ஆளும்பல்லக்கு உற்சவம் நடக்கிறது. அன்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரெங்கவிலாச மண்டபம் சென்றடைகிறார். இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் புறப்பட்டு உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×