search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கொடியேற்றப்பட்டதையும், பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் காணலாம்.
    X
    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கொடியேற்றப்பட்டதையும், பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் காணலாம்.

    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா தொடங்கியது

    ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில். இங்கு அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசையை யொட்டி குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழா 18 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா தை அமாவாசையான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனால் கோவில் நடைசாத்தாமல் விடிய, விடிய திறந்து இருந்தது.

    கொடியேற்று விழாவையொட்டி நேற்று காலை 5.30 மணிக்கு முதற்கால அபிஷேக பூஜை நடைபெற்றது. முன்னதாக ஆனைமலை மாசாணியம்மன் நற்பணி மன்றத்தினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேத்துமடை சர்க்கார்பதி வனப்பகுதிக்குள் சென்று 92 அடி உயரமுள்ள மூங்கிலை கொடி மரத்துக்காக வெட்டி கொண்டு வந்தனர். விரதம் இருந்த பக்தர்கள் குழுவினர் சர்க்கார்பதி மலையில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட மூங்கில் கொடிமரத்துடன் உப்பாற்றங்கரைக்கு சென்றனர்.

    அங்கு கொடிகம்பத்தை சுத்தம் செய்து, அதற்கு மாவிலை, மலர் மாலை, பூக்கள் தூவி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட் டன. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க 92 அடி உயர மூங்கில் கொடிமரத்தில் சிம்ம வாகனம் பொறித்த மஞ்சள் நிற கொடி கட்டப்பட்டது. தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக கொடி மரத்தை பக்தர்கள் தோளில் சுமந்து கோவிலுக்கு வந்தனர்.

    காலை 9.30 மணிக்கு மாசாணியம்மன் கோவிலுக்கு கொடி மரம் கொண்டு வரப்பட்டது. 9.55 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘மாசாணி தாயே, மாசாணி தாயே’ என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் மாசாணியம்மன் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கொடி கம்பத்திற்கு பால் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடைபெற்றது.

    கொடியேற்ற விழாவில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக் அப்புசாமி, சுந்தரம், ஆனைமலை ஒன்றிய குழு தலைவர் சாந்தி கார்த்திக், மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், தாசில்தார் வெங்கடாச்சலம், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த், அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், ஆனைமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சாந்தலிங்ககுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 80-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து தினசரி, காலை, மாலை வேளைகளில் அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. வருகிற 6-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு பிறகு ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் மயானபூஜை நடைபெறுகிறது. 7-ந்தேதி காலை 9.30 மணிக்கு சக்தி கும்பஸ்தானம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை, 8-ந்தேதி மாலை 6 மணிக்கு சித்திர தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் வாண வேடிக்கையுடன் நடைபெறுகிறது.

    9-ந் தேதி காலை 7.30 மணிக்கு விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள். 10-ந் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை, 11-ந் தேதி காலை 11.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×