search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அஸ்திரஹோமத்திற்காக அமைக்கப்பட்டுள்ள யாககுண்டத்தை படத்தில் காணலாம்
    X
    அஸ்திரஹோமத்திற்காக அமைக்கப்பட்டுள்ள யாககுண்டத்தை படத்தில் காணலாம்

    பெரியகோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி அஸ்திர ஹோமம் இன்று தொடக்கம்

    தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அஸ்திர ஹோமம் இன்று தொடங்குகிறது. இதில் 50 சிவாச்சாரியார்கள் பங்கேற்கிறார்கள்.
    தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டி தஞ்சையில் எட்டு திசைகளிலும் உள்ள காளியம்மன்கோவிலிலும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலிலும் யாகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கீழவாசல் வேளாளர்தெருவில் உள்ள உக்கிரகாளியம்மன்கோவில், மேலஅலங்கம் வடபத்திரகாளியம்மன்கோவில், வல்லம் ஏகவுரி அம்மன்கோவில், வெண்ணாற்றங்கரை கோடியம்மன்கோவில், தெற்குவீதி காளிகாபரமேஸ்வரி கோவில், வடக்குவாசல் மகிஷாசுரமர்த்தினி கோவில், ராஜகோபாலசாமி கோவில் தெருவில் உள்ள காளியம்மன்கோவில், பூமால்ராவுத்தர் தெருவில் உள்ள வடபத்திர காளியம்மன்கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆகிய 9 கோவில்களில் சாந்திஹோமம் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

    அதன்தொடர்ச்சியாக தஞ்சை பெரியகோவிலில் உள்ள நடராஜர் சன்னதி முன்பு அஸ்திரஹோமம் இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலையில் முதல்கால பூஜையும், மாலை 4 மணிக்கு 2-ம் கால பூஜையும், நாளை(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3-ம் காலபூஜையும் நடக்கிறது. பூஜையில் சிவபெருமாளின் 5 ஆயுதங்களான சிவாஸ்திரம், அகோரஅஸ்திரம், பாசுபதஅஸ்திரம், பிரத்தீங்கர அஸ்திரம், யோமாஸ்திரம் ஆகியவற்றை ஹோமத்தில் வைத்து அர்ச்சனை செய்யப்படுகிறது. இதில் 50 சிவாச்சாரியார்கள் பங்கேற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், திருக்கழுங்குன்றம் அகத்திய கிருபா அறக்கட்டளை மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    இந்தநிலையில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஸ்வரன்(தஞ்சை), துரை(திருவாரூர்) ஆகியோர் தஞ்சை பெரிய கோவிலில் நேற்றுமாலை ஆய்வு செய்தனர். பெரிய கோவிலுக்கு பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் வருவதற்காக அமைக்கப்படும் பாதை, கும்பாபிஷேகம் முடிந்தவுடன் வெளியே செல்வதற்காக அமைக்கப் படும் பாதை மற்றும் யாகசாலை பூஜை நடைபெறும் பெத்தண்ணன் கலையரங்கம் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர். ஆய்வின்போது மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
    Next Story
    ×