search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    யாகசாலை நடைபெறும் இடத்தில் சாமி சிலைகள் வைக்கும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.
    X
    யாகசாலை நடைபெறும் இடத்தில் சாமி சிலைகள் வைக்கும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.

    தஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜை 1-ந்தேதி தொடக்கம்

    கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜை வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி யாக குண்டங்களுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவில் கோபுரங்கள் புனரமைப்பு, புல்தரை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிலில் தரைதளத்தில் சிதிலமடைந்த செங்கற்கள் சீரமைக்கப்பட்டன.

    மேலும் தெற்கு திருச்சுற்று மண்டபத்தின் சுவரில் படிந்த பாசிகள் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்திற்காக பெரியகோவில் விமான கோபுரம் உள்ளிட்ட அனைத்து சன்னதி கோபுரங்களிலும் இருந்த கலசங்கள் கழற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு வருகிறது.

    கும்பாபிஷேகத்துக்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலுக்காக கான்கிரீட் போடப்பட்டு அதில் இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு தகரத்தால் கொட்டகை போடப்பட்டுள்ளது.

    இதை சுற்றிலும் செங்கற்களால் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளே மண் கொட்டப்பட்டு திடப்படுத்தப்பட்டு உள்ளது. 3 பிரிவாக பிரிக்கப்பட்டு இந்த பணிகள் நடந்து வருகின்றன. யாகசாலை பூஜைக்காக மொத்தம் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    முதல்கால யாகபூஜை வருகிற 1-ந் தேதி(சனிக்கிழமை) மாலை தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 2-ந் தேதி 2, 3-வது கால யாகசாலை பூஜையும், 3-ந் தேதி 4 மற்றும் 5-வது கால யாக பூஜையும், 4-ந் தேதி 6 மற்றும் 7-வது கால யாக பூஜையும் நடக்கிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் அன்று காலை 8-ம் கால யாகபூஜை நடக்கிறது.

    தற்போது யாக குண்டங்களில் சாமிபடங்கள் வரையும் பணிகளில் ஓவியர்கள் ஈடுபட்டுள்ளனர். 15-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் யாகசாலை நடைபெறும் இடங்களில் விநாயகர், முருகன் உள்ளிட்ட சாமி சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×