search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்
    X
    தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்

    பிப்ரவரி 5-ந்தேதி தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

    தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தஞ்சாவூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தஞ்சை கோவில் கும்பாபிஷேகம் குறித்து சுற்றுலா, கலாசாரம், அறநிலையங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக் டோங்ரே வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் உலகப் புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ந் தேதியன்று நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அரசுக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்த கும்பாபிஷேக விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கு பெற வாய்ப்புள்ளது. எனவே, அந்த விழாவை வெற்றிகரமாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கும், விழா ஏற்பாடுகளை கண்காணிப்பதற்கும் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் மட்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து அரசு கவனமுடன் பரிசீலித்து 21 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது. இந்த குழுவின் தலைவராக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் செயல்படுவார். நிதித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்துசமய அறக்கட்டளைத் துறை, உள்துறை, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள்,

    போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாக இயக்குனர், போலீஸ் டி.ஜி.பி., தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குனர், தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தெற்கு ரெயில்வே பொது மேலாளர், இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஆகிய 20 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக தஞ்சாவூர் கலெக்டரை அரசு நியமித்து ஆணையிடுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×