search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகம்
    X
    கும்பாபிஷேகம்

    கும்பாபிஷேகத்தில் பயன்படுத்தப்படும் ‘அஷ்டபந்தனம்’

    பல நேரங்களில் கும்பாபிஷேக பத்திரிகைகளில் ‘அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ‘அது என்ன அஷ்டபந்தனம்?’ என்று பலருக்கும் மனதில் கேள்வி எழுந்திருக்கலாம். அது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    கோவில்களில் கும்பாபிஷேகம் நடப்பதை அனைவரும் தரிசனம் செய்திருப்போம். குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கோவில்களில், சம்பந்தப்பட்ட தெய்வ திருமேனிகளின் மீது தெய்வ சக்திகளை எழுந்தருளும்படி செய்வதற்கான வழிமுறைகளை செய்வது ‘கும்பாபிஷேகம்’ ஆகும். அது ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் என்ற பொதுவான நான்கு வகைகளில் உள்ளது.

    ‘ஆவர்த்தம்’ என்பது புதிய கோவிலில் இறைவனின் திருவுருவத்தை அமைப்பதாகும். ‘அநாவர்த்தம்’ என்பது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த கோவில்களை புதுப்பித்து, மறு பிரதிஷ்டை செய்வதாகும். ‘புனராவர்த்தம்’ என்பது காலத்தால் சிதிலமடைந்த கோவில்களை புதுப்பித்து புனர் நிர்மாணம் செய்வதாகும். ‘அந்தரிதம்’ என்பது மனிதர்களின் செயல்களால் ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்து கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் பணியைச் செய்வதாகும்.

    பல நேரங்களில் கும்பாபிஷேக பத்திரிகைகளில் ‘அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ‘அது என்ன அஷ்டபந்தனம்?’ என்று பலருக்கும் மனதில் கேள்வி எழுந்திருக்கலாம்.

    கோவில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதில் இருந்து, ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோவிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்படும். ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, அந்த இடத்தில் இருந்து சிறிதும் அசையாமல் இருப்பதற்காக, அஷ்டபந்தனம் என்ற எட்டு விதமான பொருட்கள் கலந்த மருந்து சாற்றப்படும். அந்த மருந்து, தெய்வ திருமேனியை பீடத்துடன் அழுத்தமாக இணைத்து பிடித்துக்கொள்ளும். பொதுவாக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாற்ற வேண்டும் என்று ஆகம விதிகள் குறிப்பிட்டுள்ளன.

    உயிர்கள் அனைத்தும் நலமாக இருக்க வேண்டுமென்றால், கோவில்களில் உள்ள மூல தெய்வ மூர்த்தம், அதன் ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல், நிலைத்து நிற்க வேண்டும். அப்படி இருந்தால்தான் மக்களுக்கு நன்மைகள் நடக்கும். மூல மூர்த்தி முதல் அனைத்து தெய்வ திருமேனிகளும் பீடத்தில் நிலையாகவும், அசையாமலும் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் ‘அஷ்டபந்தன மருந்து’ சாற்றப்படுகிறது.

    அஷ்டபந்தன மருந்து கலவை தயாரிப்பதற்கு, ‘கொம்பரக்கு’, ‘சுக்கான் தூள்’, ‘குங்கிலியம்’, ‘கற்காவி’, ‘செம்பஞ்சு’, ‘சாதிலிங்கம்’, ‘தேன்மெழுகு’, ‘எருமை வெண்ணெய்’ ஆகிய எட்டு பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த எட்டுப் பொருட்களையும் குறிப்பிட்ட வரிசை முறைப்படி ஒவ்வொன்றாக சேர்த்து, உரலில் இட்டு தக்கபடி இடித்து, குறிப்பிட்ட பதம் கொண்டதாக தயாரிக்கப்படும். பதமாக உள்ள மருந்துதான் ஆதார பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்தும் வகையில் பிடிப்புடன் செயல்படும்.

    மருந்துகளைக் கலந்து இடிக்கும் பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை தூய்மையாக இருப்பதுடன், அவற்றை தயாரிப்பவர்கள் உடல் மற்றும் மனத் தூய்மையோடும், இறை சிந்தனையோடும் இருக்க வேண்டும் என்பதும் ஆன்மிக நியதியாகும். எந்தெந்த பொருட்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்கான கால அளவுகளும் மருந்து தயாரிப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.

    சுமார் 100 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் விதத்தில் அஷ்டபந்தன மருந்தை தயாரிக்கும் வழிமுறையும் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு மாமாங்கம் என்ற 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக மருந்து தயாரித்து, அதை தெய்வ மூர்த்தங்களுக்கும், பீடத்துக்கும் இடையில் சாற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்வது இன்றைய காலகட்ட நடைமுறையில் இருந்து வருகிறது. திருவண்ணாமலை தலத்தில் உள்ள அருணாச்சலேஸ்வர சிவலிங்க திருமேனியை தங்கத்தை கொண்டு ‘சொர்ண பந்தனம்’ என்ற முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆச்சரியமான ஆன்மிக தகவல் சொல்லப்படுகிறது.
    Next Story
    ×