search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாய்பாபா
    X
    சாய்பாபா

    அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

    அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது.
    திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டியில், கடந்த 2010-ம் ஆண்டு ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா அறக்கட்டளை சார்பில் சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, பக்தர்கள் அளித்த நன்கொடைகள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன. சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலின் தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன், ரூ.30 கோடி மதிப்பில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இக்கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 20-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி நான்கு கால யாகசாலை பூஜைகளுக்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று நடைபெற்றது. இதில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

    இன்று(சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றில் இருந்து 1,008 குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டு யானை, குதிரை ஆகியவற்றின் மீது வைத்து அதிர்வேட்டுகள் முழங்க புனிதநீர் குடங்களை அக்கரைப்பட்டி கோவில் யாகசாலைக்கு ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வருகின்றனர். தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது. வருகிற 20-ந் தேதி காலை 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடக்கிறது. காலை 9.30 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் சாமிகளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம், குளியலறை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    சமயபுரம், திருச்சி, டோல்கேட், மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய ஊர்களில் இருந்து கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சந்திரமோகன், அறங்காவலரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான ராஜேந்திரன் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×