
6-ம் நூற்றாண்டுக்கு முன்னரே புகழ்பெற்று இன்று வரை ஒளியோடு விளங்கும் கோவிலை உடையது. இங்கு பொற்கூரையின் கீழ் இறைவன் ஆடுகின்றமையால் பொன்னம்பலம் எனவும் பெயர் பெற்றது. தேவார திருமுறைகள் கண்டது சிதம்பரம், திருவாசகம் தந்த மாணிக்கவாசகரை வரவேற்றது சிதம்பரம். திருவிசைப்பா பாடிய சேந்தனார், திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர், கண்டராதித்தர் முதலியவர்களை ஏற்றுக்கொண்டது சிதம்பரம். இக்கோவிலில் தான் சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர் ஆகிய மூவர் கையடையாளங்களுடன் தேவார திருமுறைகள் திருக்காப்பிட பெற்றன. நம்பியாண்டார் நம்பிகளை கொண்டு ராஜராஜசோழன் அத்திருமுறைகளை வெளிப்படுத்தி பல கோவில்களிலும் அவற்றை வழிபாட்டு காலங்களில் ஓதும்படி செய்தான்.
6 கால பூஜை
தில்லை கூத்தனுக்குத் தினமும் 6 கால பூஜைகள் தீட்சிதர்களால் பதஞ்சலி முனிவர் வகுத்த வைதீக முறைப்படி நடைபெறுகின்றன. ஒவ்வொரு கால பூஜைக்கும் முன்னால் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு ரத்தினசபாபதிக்கும் சேர்த்து அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு பால் நைவேத்தியமும், 8.30 மணிக்கு கால சந்தி பூஜையும், 11 மணிக்கு 2-ம் காலமும், 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு 2-ம் கால பூஜையும், இரவு 10 மணிக்கு அர்த்தசாம பூஜையும் சிறப்பாக நடந்து வருகிறது.
இங்கு அர்த்தசாம பூஜையின் போது அனைத்து தல மூர்த்திகளும் இங்கு வந்து எழுந்தருளியிருந்து காலை அவரவர் இருப்பிடம் செல்வர் என கூறப்படுகிறது. அதனால் இங்கு அர்த்தசாம பூஜை சிறப்பாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் சபை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜையும், சிவராத்திரியில் இரவு முழுவதும் 4 கால பூஜைகளும், கிரகண நாட்களில் கிரகணம் முடிவுற்றபின் துப்புரவு செய்யப்பட்டு தனிப் பூஜையும், தீபாவளியன்று காலை 6 மணியளவில் சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றன. காலந்தவறாது 6 கால பூஜைகள் நடைபெறும் கோவிலாக உள்ளது இதன் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு கால பூஜையின் நிறைவிலும் சிதம்பர ரகசியம் மும்முறை காட்டப்படும். ஆனி, மார்கழி இரு மாதங்களில் ஆடல்வல்லானுக்கும், ஐப்பசி பூரத்தில் அம்பிகைக்கும், பங்குனி உத்திரத்தில் முருகனுக்கு பத்து நாட்களாகவும், கந்த கோட்ட முருகனுக்கு ஆறு நாட்களும் விழாக்கள் நடைபெறுகின்றன.
ஆடல்வல்லானும் திருவாதிரை சிறப்பும்
அரங்கத்தில் ஆடுவதால் நடராஜரை சபாபதி என்றும் கூத்தபிரான் என்றும் திருச்சிற்றம்பலக் கூத்தர் என்றும் குறிப்பிடுவர். சிவனின் பலவகையான நடனங்களில் சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம் இடம்பெற்றுள்ளது. நடராஜ பெருமானது குனித்த புருவத்தையும், கோவைப்பழம் போல் சிவந்த வாயினையும், குமிழ்சிரிப்பையும் பரந்து விரிந்த சடையையும், பால் போன்ற திருநீற்றையும், அருள் செய்ய மகிழ்ச்சியுடன் தூக்கிய திருவடியையும் காணும் பேறு வாய்க்கப்பெற்றால் மனிதப்பிறவியும் வேண்டத்தக்கதே என்கிறார் அப்பர்பெருமான்.
நடராஜ பெருமானின் உடுக்கை படைத்தலையும், அபயக்கரம் காத்தலையும், அக்கினி அழித்தலையும், ஊன்றிய திருவடி மறைத்தலையும், தூக்கிய திருவடி அருளுதலையும் குறிப்பால் உணர்த்துகின்றன. இந்த ஐந்தையும் பஞ்ச கிருத்தியம் என்று கூறுவர். தில்லை நடராஜர் கருவறைக்கு 5 படிகள் ஏற வேண்டும். அவை சிவபெருமானின் ஐந்தெழுத்தை உணர்த்தும் பஞ்சாட்சரபடிகள் எனப்படும். நடராஜரின் திருஉருவத்தை சுற்றி அமைந்திருக்கும் திருவாசி பிரணவத்தின் வடிவமாகும். திருவாசியில் தீச்சுடர் போல் தென்படும் அமைப்புகள் மந்திர மாத்ருகா அட்சரங்கள் என்னும் மூலமந்திர எழுத்துகளைக் குறிக்கும்.
நடராஜரின் இடப்பக்கத்தில் அம்பிகை சிவகாமசுந்தரி அருள்பாலிக்கிறார். பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயம் வடிவில் அங்கு சிவபெருமான் இருக்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் நடராஜருக்கு வலப்பக்கம் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. ரத்தினத்தால் செய்யப்பட்ட நடராஜர் விக்ரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிகலிங்கமும் இன்றும் பூஜித்து வரப்படுகிறது.
நடராஜர் சன்னதி பெரும்பாலும் தெற்கு நோக்கியே அமைந்திருக்கும். சிதம்பரம் நடராஜப்பெருமான் தெற்கு நோக்கியே அருள்பாலிக்கிறார். 27 நட்சத்திரங்களில் 2 மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படுகின்றன. அவை திருவேணாமும், திருவாதிரையும் ஆகும். திருவோணம் திருமாலுக்கு உகந்தது. திருவாதிரை நடராஜப் பெருமானுக்கு உகந்தது ஆகும். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர் கோவிலில் உள்ள ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் அம்பாளுடன் எழுந்தருளும் நடராஜருக்கு மகாஅபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதம் வழங்கப்படும்.