
இதைத்தொடர்ந்து ராப்பத்து முதல் நாள் தொடக்கமும், சொர்க்க வாசல் திறப்பும் நேற்று நடந்தது. நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்க வாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபம் முன்பு மணல் வெளியில் எழுந்தருளினார்.
பகல் பத்து உற்சவத்தின்போது நம்பெருமாள் தினமும் அர்ஜுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்திலும் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம். பகல்பத்து திருநாட்களின்போது திருமொழி பாசுரங்களும், ராப்பத்து திருநாட்களின்போது திருவாய்மொழி பாசுரங்களும் அபிநயம், வியாக்யானங்களுடன் அரையர்களால் பாடப்படும்.
இன்று (செவ்வாய்க்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் 2-ம் நாள் ஆகும். இதனையொட்டி இன்று மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மதியம் 1 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. மதியம் 2.30 மணிக்கு நம்பெருமாள் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். இரவு 8 மணி வரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதே போல் தினமும் புறப்பாடாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருக்கைத்தல சேவை நடக்கிறது. அன்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடக்கிறது. ராப்பத்து நிகழ்ச்சியின் 8-ம் நாளான வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 5.15 முதல் 6.15 மணி வரை வையாளி வகையறா கண்டருளுகிறார்.
இரவு 7.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி இரவு 10.30 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இரவு 11 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். ராப்பத்து நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதியுடன்(புதன்கிழமை) நிறைவடைகிறது. அன்று காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். காலை 10.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படும். 11 மணிக்கு நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் முன் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தின் திருவாய் மொழி பாசுரங்களை அரையர்கள் அபிநயத்துடன் இசைக்கிறார்கள். மூலவரை முத்தங்கி சேவையில் பக்தர்கள் தரிசிக்கலாம். வருகிற 15-ந்தேதி (தை 1-ந்தேதி) சங்கராந்தி விழா நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு 3 மணிக்கு சங்கராந்தி மண்டபம் சென்றடைகிறார்.
நம்மாழ்வார் மோட்சம் வருகிற 16-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடக்கிறது. அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 2.45 மணிக்கு கனு மண்டபம் சென்றடைகிறார். இரவு 8.15 மணிக்கு குதிரை வாகனத்தில் கனு பாரிவேட்டை கண்டருள்கிறார்.
இரவு 10.30 மணி முதல் 11 மணி வரை மூலஸ்தானத்தில் இருந்து இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. 11 மணி தொடங்கி 17-ந்தேதி அதிகாலை 2 மணி வரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவையும், அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சாற்று முறையும் நடக்கிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.