search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர் வீதிஉலா வந்ததையும், 63 நாயன்மார்களை பள்ளி மாணவர்கள் தோளில் சுமந்தவாறு சென்றதையும் படத்தில் காணலாம்.
    X
    விநாயகர் வீதிஉலா வந்ததையும், 63 நாயன்மார்களை பள்ளி மாணவர்கள் தோளில் சுமந்தவாறு சென்றதையும் படத்தில் காணலாம்.

    கார்த்திகை தீபத்திருவிழா 6-வது நாள்: 63 நாயன்மார்கள் வீதிஉலா

    கார்த்திகை தீபத்திருவிழாவின் 6-வது நாளில் திருவண்ணாமலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடைபெற்றது. நாயன்மார்களை பள்ளி மாணவர்கள் தோளில் சுமந்து மாடவீதியை சுற்றிவந்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று முன்தினம் இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடந்தது. வெள்ளி மூ‌ஷிகம், வெள்ளி மயில், வெள்ளி பெரிய ரி‌‌ஷப வாகனங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    விழாவின் 6-வது நாளான நேற்று காலை 11 மணி அளவில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் அம்பாளுடன் வெள்ளி யானை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. நாயன்மார்களை சுமந்து செல்வதற்காக பள்ளி மாணவர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர். மாணவர்கள் 63 நாயன்மார்களை தங்கள் தோள்களில் சுமந்து மாடவீதியை சுற்றி வந்தனர்.

    தொடர்ந்து திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் மாடவீதியில் உலா வந்தனர். பின்னர் மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு மர யானை வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    இரவு 10 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி தேர், வெள்ளி இந்திர விமானம், வெள்ளி விமானங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.

    பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×