search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண்ணாடி ரி‌‌ஷப வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் வீதி உலா நடந்த போது எடுத்த படம்.
    X
    கண்ணாடி ரி‌‌ஷப வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் வீதி உலா நடந்த போது எடுத்த படம்.

    கண்ணாடி ரி‌‌ஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா: நாளை தேரோட்டம்

    கார்த்திகை தீபத்திருவிழாவின் 5-ம் நாளில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று முன்தினம் இரவில் வெள்ளி மூ‌ஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், வெள்ளி காமதேனு வாகனத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    5-வது நாளான நேற்று காலை 11 மணி அளவில் வெள்ளி மூ‌ஷிக வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரி‌‌ஷப வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    முன்னதாக பஞ்சமூர்த்திகள் தேர்களுக்கு கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்களுக்கு வைக்கப்பட உள்ள கலசங்கள் கோவிலில் உள்ள விநாயகர் சன்னதி முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகள் தேர்களுக்கு கலசங்கள் வைக்கப்பட்டன.

    தொடர்ந்து இரவு 10 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி பெரிய ரி‌‌ஷப வாகனத்திலும், சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும் எழுந்தருளி கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பஞ்சமூர்த்திகள் தேர்களுக்கு பொருத்தப்படும் கலசங்களை கொண்டு வந்த போது எடுத்த படம்.

    கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடக்கிறது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வருவார்கள். தொடர்ந்து மர யானை வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெறுகிறது. இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் அருணாசலேஸ்வரர் வீதி உலா நடக்கிறது.

    மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 7.05 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து சுப்பிரமணியர் தேரும் வீதி உலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரிய தேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.

    பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தை முன்னிட்டு 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று நகரின் மையப்பகுதியில் 2.668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
    Next Story
    ×