
சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது, கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் தொடங்கவேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைப்பிடிக்காததால் அவரது தேர் அச்சு முறிந்தது. அந்த இடம் தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
கணபதி ஹோமத்தை ‘விநாயகர் வேள்வி’ என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது மிகச்சிறந்த பலனைத்தரும்.