
இதற்காக கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் பல்வேறு அரசு துறைகள், பக்தர்கள் உதவியுடன் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி பாலாலயம் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடக்கிறது.
இதற்கான யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து முதல்கால யாகசாலை பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் 4-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது. காலை 7.10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெறுகிறது. அதன் பின்னர் காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் அனைத்து பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனிதநீராட்டு வைபவமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
பாலாலயத்தையொட்டி அனைத்து சன்னதிகள் மூடப்பட்டன. இதனால் மூலவரை தரிசனம் செய்ய முடியாமல் யாகசாலை பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாலாலயம் முடிந்த பின்னர் பாலாலய திருமேனிகளில் அருட்சக்தியானது வேதசிவாகம முறைப்படி சேர்க்கப்பட்டு, அவைகள் மட்டுமே பெருவுடையார் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக எழுந்தருள செய்யப்படும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னரே கருவறை மூலவர்களை தரிசனம் செய்ய முடியும்.