
தஞ்சை பெரியகோவிலில் 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 24 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பெரிய கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக பெரியகோவிலில் தரைதளம் சீரமைப்பு, புல்தரை சீரமைப்பு, கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகன் சன்னதிகளின் கோபுரங்களும் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. கோவில் வளாகத்தில் உள்ள திருச்சுற்று மாளிகை சீர் செய்யப்பட்டு அங்குள்ள லிங்கங்களை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தொடாத வகையில் தடுப்புக்கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெத்தண்ணன் கலையரங்கம் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) பாலாலயம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது.
இதற்காக பெரியகோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதி அருகே யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து பாலாலயம் வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடக்கிறது.